மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு | Pa.Chidambaram Accusations BJP Govt Closed Mahila Bank

Spread the love

பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பாஜக அரசு மூடிவிட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ‘இந்தியாவின் இந்திராவை கொண்டாடு வோம்’ எனும் விழா, மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் தலைமையில், அம்பத்தூரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதில், மகளிர் காங்கிரஸாருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

2-ம் நாளான நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசியதாவது: இந்திரா காந்தி அஞ்சி நான் பார்த்ததில்லை. அவரது வலிமையை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பெற்றால், இந்தியாவையே வழிநடத்தலாம். மக்கள் தொகையில் பாதிக்கு பாதி இருக்கும் பெண்களுக்கு உரிய பங்களிப்பு இல்லை. சமுதாய அமைப்பு, பொருளாதார வலிமையின்மை, குடும்ப பொறுப்புகள், சமூக, பொருளாதார தடைகள் இருப்பதால்தான் பெண்கள் தலைமை பொறுப்பு வர முடியவில்லை.

அந்த தலைமை பொறுப்புக்கு வந்தவர் இந்திரா காந்தி. தலைமை பொறுப்புக்கு அனைத்து பெண்களும் வரவேண்டும். அதற்கு, சமுதாய கட்டுப் பாடுகளை மாற்ற வேண்டும். பொருளாதார வலிமையை அவர்களுக்கு தர வேண்டும். குடும்ப சூழலை பெண்களோடு, ஆண்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த 3 மாற்றங்களும் வராத வரை பெண்கள் முழுக்க முழுக்க அரசியல் வாழ்க்கை ஈடுபட முடியாது.

பெண்களுக்கு பொருளாதார வலிமை கொடுக்க, பிரதமர் மன்மோகன் சிங் மகளிரால் நடத்தப்படும் மகிளா வங்கியை தொடங்கினார். பல்வேறு கிளைகளும் தொடங்கப்பட்டன. பாஜக ஆட்சி அமைந்தவுடன் அந்த வங்கிகள் மூடப்பட்டன.

உஜ்வாலா திட்டத்தின் கீழ், சமையல் கேஸ் அடுப்பை கொடுத்துவிட்டு, ஆண்டுக்கு 3 சிலிண்டர்களை மட்டும் கொடுத்தால், எப்படி அவர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும். மாதத்துக்கு ஒன்றாவது வழங்க வேண்டாம். பாஜக அரசின் பெண்கள் மீதான பார்வை அப்படி தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது, “காங்கிரஸ் பெண் எம்பிகளின் எண்ணிக்கை இப்போது 2 ஆக உயர்ந்துள்ளது. இப்போது 1 பெண் எம்எல்ஏ இருக்கிறார். அடுத்த தேர்தலில் மேலும் அதிமாக பெண் எம்எல்ஏக்கள் இருப்பார்கள். அதற்கு அவர்கள் மக்களுக்காக போராட முன்வர வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில், ‘தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் மகளிருக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்க பாலு, துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, சொர்னா சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *