மக்களவையில் திருப்பரங்குன்ற விவகாரம்: பாஜக VS திமுக இடையே நடந்த காரசார விவாதம்!

Spread the love

திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் வழக்கம்போல இந்த ஆண்டும் ஏற்றப்பட்டது.  எனினும் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் சிலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்து அனுமதி பெற்றிருந்தனர். எனினும் அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை.

ஏன் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை என்று இந்து அமைப்புகள், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திலும், சட்டப்போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

இந்து அமைப்பினர் திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றியாக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான சட்டப்போராட்டம் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், இன்றைய மக்களவைக் கூட்டத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் பாஜக எம்.பி முருகன் இருவரிடையே இதுதொடர்பான விவாதம் காரசாரமாக நடந்தது.

கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்தனர்.

திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, “திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி கோவிலில் பல ஆண்டுகால மரபுப்படி கடந்த டிசம்பர் 3ம் தேதி உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், மக்களிடையே அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் சில இந்து அமைப்புகள் கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்தனர். அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் நீதிபதி ஒருவர்.

நாட்டை ஆளும் கட்சி மதரீதியான கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது, நீதிபதிகளையே கட்டுப்படுத்தும் அளவிற்கு அராஜகங்களைச் செய்துவருகிறது.” என்று பாஜகவை குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றம் போலீஸ் பாதுகாப்பு

சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா?

இதற்குப் பதிலளித்த பாஜக எம்.பி. எல் முருகன், “திருப்பரங்குன்றத்தில் மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறித்திருக்கிறது தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் திமுக அரசு. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறது. திமுக அரசிற்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா?

இந்தியச் சட்டம் மக்கள் ஒவ்வொருவருக்கும் வழிபாட்டு உரிமையை வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படை உரிமையை மறுத்து சட்டத்திற்கு எதிரான வேலையைச் செய்திருக்கிறது திமுக அரசு” என்று பேசியிருக்கிறார்.

டி.ஆர்.பாலு, எல்.முருகன்

இதையடுத்துப் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி நீங்கள் தாராளமாகப் பேசலாம். ஆனால், நீதிபதியை கட்சியுடன், அமைப்புடன் தொடர்புப்படுத்திப் பேசுவது தவறு. நீதிமன்றத்தை அவமதிக்கும் பேச்சு இது. நீதிபதிகுறித்து எம்.பி. டி ஆர் பாலு பேசியதை மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று சபநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *