சென்னை: “மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கியதற்கு நன்றி” என தவெக கட்சியில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட ஐந்து வரலாற்று நாயகர்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ மக்களுக்கான அரசியலை முன்வைத்து நான் கரம் கோத்துள்ளேன். தலைவர், முக்கிய நிர்வாகிகள், கட்சித் தோழர்கள் மற்றும் மக்கள் சக்தியுடன் இணைந்து மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்குவோம்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற மானுட மாண்பு, ‘நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற அரசியலமைப்பு நெறி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உலக அறம் உள்ளிட்ட சமத்துவ, சமூக நீதி கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களோடு பயணிப்பேன். மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.