நாம் பார்த்தவரையில் L.B.ரோட்டில் பெட்ரோல் பல்க் அருகே நடைபாதையில் எந்த ஊன்றுதலும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 அடி உயரத்துக்கு ஒரு பேனரை வைத்திருந்தனர். அடையாறிலிருந்து க்ரீன்வேஸ் சாலைக்குள் நுழைகையில் நான்கு முனையிலும் வாகனங்கள் செல்லக்கூடிய ஜங்ஷனிலும் இப்படியாக எந்த ஊன்றுதலும் இல்லாமல் பேட்ச் வடிவ பதாகையையும் பேனரையும் வைத்திருந்தனர்.
க்ரீன்வேஸ் சாலை முழுவதும் பேனர்மயமே. அங்கிருந்து வெளியே வந்து ஆர்.ஏ.புரத்துக்குள் நுழைகையிலும் சாலை ஓரத்தில் 30 அடிக்கு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் உதயநிதியின் கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர். அதை கடந்து சில மீட்டர் தூரத்திலேயே மீண்டும் நடைபாதையை மறித்து காலண்டர் வடிவில் ஒரு கட் அவுட். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் என எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய பகுதியில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மக்களுக்கு அத்தனை இடையூறாக இருக்கிறது.
‘எந்த ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள வகையில் பிறந்தநாளை கொண்டாடுங்கள்…’ என உதயநிதி செய்தி சொல்லியிருக்கிறார். ஆனால், தொண்டர்களின் புரிதல் வேறாக இருக்கிறது.