நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
‘மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை பாஜகதான் செய்கிறது. ஆனால், விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்று ராகுல் காந்தி கூறுகிறார்.
மக்கள்தொகை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பிரிவினர் வேலை வாய்ப்புகள் பெறலாம் என அரசியல் சட்டத்தில் விதி உள்ளது.
இதையும் படிக்க | உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
கார்ப்பரேட் நிறுவன தலைவர்களில் எத்தனை பேர் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினராக இருக்கிறார்கள்? ஊடகத்தில் பழங்குடியினரைச் சேர்ந்த எத்தனை பேர் இருக்கிறார்கள்?
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே பாஜகவினர் ஏன் பயப்படுகிறார்கள்? 2021 கணக்கெடுப்பு காலாவதியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன’ என்று பேசியுள்ளார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத் தேர்தலின்போதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையாகவும் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது. மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். அந்தவகையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்தியில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.