திண்டுக்கல்: “மக்கள் அதிமுகவை நம்பத் தயாராக இல்லை. 18%-க்கும் கீழ் அக்கட்சியின் வாக்கு சதவீதம் சென்றாலும் செல்லும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறது.” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் காணொலி காட்சி மூலம் ‘அன்புச் சோலை’ திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் குறித்து திமுக பயப்படவில்லை. இரண்டு மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவிடும். தற்போது எஸ்ஐஆர் மூலம் பெயர் சேர்ப்பது, முழு விவரங்களை வெளியிடுவது, குறைகளை நீக்குவது போன்ற பணிகளுக்கு போதிய கால அவகாசம் இல்லை. தேர்தல் முடித்த பின்பு ஒரு வருடம் கூட எஸ்ஐஆரை நடத்துங்கள், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.
எஸ்ஐஆர் நடத்த கால அவகாசம் தேவை. இதில் தவறுகள் வந்து விடக்கூடாது. வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதையே நாங்கள் கூறுகிறோம். பல மாநிலங்களில் இந்த முறைகேடுகளை செய்து மத்திய பாஜக அரசு வெற்றி பெற்று உள்ளது. அதே நிலையை தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கின்றனர். அது நிச்சயமாக நடக்காது.
வாக்குரிமை இல்லை என்றால் அனைவரும் வருத்தப்படுவார்கள். எஸ்ஐஆர் படிவத்தில் எழுத்துப் பிழைகள் இருந்தாலே அந்த விண்ணப்பம் செல்லாது என கூறுகின்றனர். படிவத்தில் சிறிய பிழைகள் வந்தால் அதற்கு மீண்டும் படிவம் கொடுக்க மாட்டார்களாம். அவர்கள் மீண்டும் வாக்காளர்களாக வர முடியாதாம். இது சரியானதா?
அதிமுகவினருக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை. தேர்தலை நம்பிக்கை இல்லாமல் சந்திக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான். இன்று இல்லை, நாளை இல்லை, ஆண்டுதோறும் தேர்தல் வைத்தாலும் திமுக அதனை சந்திக்கும். ஏனெனில், திமுகவின் அடித்தளம் உறுதியாக உள்ளது. அதிமுக அடித்தளம் இல்லாத தலைமையாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கோடி தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்று கட்சியின் தலைவராக மாறியுள்ளார். பின் 8 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதல்வராக உள்ளார்.
மக்கள் அதிமுகவை நம்பத் தயாராக இல்லை. அதிமுக ஓட்டுசதவீதம் 18%-க்கும் கீழ் சென்றாலும் செல்லும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.