மதுரை: “மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு திடலில் செய்தியாளர்களிடம் கூறியது: “அரசியல் பரிசீலனை அறிக்கை மற்றும் அரசியல் வரைவுத் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. 36 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பிரதிநிதிகள் விவாதத்தில், ஒட்டுமொத்தமாக அரசியல் வரைவுத் தீர்மானத்துக்கு ஆக்கப்பூர்வமான, நேர்மறையான ஆதரவு இருந்தது. சில ஆலோசனைகளும் வந்துள்ளன.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றிய மாநிலங்கள் பாதிக்காத வகையில், சம வாய்ப்புள்ள, நியாயமான தொகுதி மறுவரையறை செய்யவேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமான, வெளிப்படையான, நம்பகமான அமைப்பாக செயல்படுவதுடன், நியாயமான சமதளப் போட்டி அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.
இம்மாநாட்டில், பாலஸ்தீன மக்கள் மீது கொடூரமான இன அழிப்பை நடத்தி வரும், அமெரிக்க ஆதரவு யூதவெறி இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், தாய்நாட்டுக்காகப் போராடிவரும் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு, இரு நாடு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவும், ஒருமைப்பாடும் தெரிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுவரையறை என்பதை இயந்திர கதியாக மக்கள்தொகை அடிப்படையில் நடத்தக்கூடாது. அனைவரும் ஏற்கக்கூடிய முறையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் 25 ஆயிரத்து 753 ஆசிரியர்கள் பணி நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பதற்கு, மம்தா பானர்ஜியின் ஊழல் அரசுதான் காரணம். மேற்கு வங்கத்தின் பள்ளிக் கல்வித்துறையை மம்தா அரசு முற்றிலும் சீர்குலைத்துவிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் அரசின் பல அமைச்சர்கள், மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, பல அதிகாரிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சி மீது மம்தா குற்றம்சாட்டுகிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு வார்த்தை கூட மார்க்சிஸ்ட் கட்சி பற்றி குறிப்பிடவில்லை. மம்தா பானர்ஜி நெருக்கடியில் சிக்கும்போது பிரச்சினையை திசை திருப்புவது வழக்கமானதுதான். வக்பு திருத்தச் சட்டத்தை அடையாள அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையை மறுப்பதால் தான் எதிர்க்கிறது” என்று முகமது சலீம் கூறினார்.
மேலும் பாலஸ்தீன மக்கள் அணியக்கூடிய ‘காஃபியா’ எனும் துண்டை, மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தோளில் அணிந்து தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். பேட்டியளித்த முகமது சலீமும் காஃபியா துண்டை தோளில் அணிந்திருந்தார். சந்திப்பின்போது, மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.அருண்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகர் உடனிருந்தனர்.