மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Dinamani2f2025 02 022f2mzu2y1h2ftncmtry.jpg
Spread the love

மணப்பாறை: மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான் பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மணப்பாறையில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது, இது மணப்பாறையா இல்லை, பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாணவர் பாசறையா என்று சந்தேகப்படும் அளவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர்கள், ஆட்சியர், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.

ஜம்போரி எனப்படும் பெருந்திரள் அணியாக நடைபெற்று வருகிறது. இன்னும் சிறப்பாக, கலைஞர் நூற்றாண்டு விழாவாகவும் இணைத்து நடத்தப்படுகிறது. இன்றைக்கு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாட்டிற்கே பெரும் புகழை ஈட்டித் தருகிறது. இந்தப் புகழ், இந்தியப் புகழ். இன்னும் சொன்னால், உலகப் புகழ்.

சாரண, சாரணியர் இயக்கம், உலக அளவிலான இளைஞர்களின் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

சாரண, சாரணியர் இயக்கத்தில் எட்டில் ஒரு பங்கு நாம்

இந்தியா முழுவதும், 80 இலட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவங்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சம் மாணவர்கள். எட்டில் ஒரு பங்கு நாம் இருக்கிறோம். எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் பங்கு என்பது, எப்போதும் அதிகமாக தான் இருக்கும் என்பதை சாரணர் இயக்கத்திலும் உண்மை ஆக்கியிருக்கிறோம்.

நீங்கள் பங்கு பெற்றிருக்கும் சாரணர் இயக்கம் என்பது, உடலினை உறுதிசெய்யும் இயக்கமாக, உள்ளத்தை உறுதிசெய்யும் இயக்கமாக, ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமாக, ஒழுங்கை உருவாக்கும் இயக்கமாக இருக்கிறது.

உங்கள் எல்லோரையும் இந்த சீருடையில் பார்க்கும்போது என்னுடைய உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏன் என்றால், நாளைய குடிமக்களான இளைய தலைமுறையிடம் சமூக சேவை செய்தல், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.

மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று

இந்த நேரத்தில் நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவது, நாட்டுப் பற்று என்பது, நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து, மக்கள் மீதான பற்றாக வளரவேண்டும். மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப் பற்று. இப்படி, இளைய தலைமுறைய இனிய தலைமுறையாக இந்த சாரணர் இயக்கம் மாற்றுகிறது.

ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளரவேண்டும் என்ற நோக்கத்தோடு தான், ராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை உருவாக்கினார்.

சாரண, சாரணியர் இயக்கத்தின் இந்த பெருந்திரளணி, ஒவ்வொரு நாட்டிலும், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரைக்கும் 18 பெருந்திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடந்திருக்கிறது.

2000-ஆவது ஆண்டில் தமிழ்நாட்டில் சாரண சாரணியர் இயக்கப் பொன் விழா பெருந்திரளணி நடந்தபோது, தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அன்றைக்கு அதை நடத்திக்காட்டினார். இப்போது வைரவிழா கொண்டாடும்போது நான் முதல்வராக இருக்கிறேன். தலைவர் கலைஞர்தான், இந்த நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை உருவாக்கியது அவர்தான். எனவே, அவரது நூற்றாண்டு விழாவை நீங்கள் கொண்டாடுவது பொருத்தமானதுதான்.

நாம் எல்லோரும் சமத்துவத்துடனும், சகோதரத்துவ உணர்வோடும் ஒன்றிணைந்து இந்தியர் என்ற பெருமிதத்தோடு, ஒற்றுமையுடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான குழந்தைகள் ஒற்றுமையாக ஒரே இடத்தில் ஒன்றுகூடி, தங்களின் பண்பாட்டை பகிர்ந்துகொள்ளவும், வளர்த்து கொள்ளவும், அன்பை மேம்படுத்திடவும் மாபெரும் இந்த பெருந்திரளணி நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”-என்று கணியன் பூங்குன்றனார் அவருடைய முதுமொழிக்கேற்ப சவுதி அரேபியா, மலேசியா, இலங்கை, பாளம் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல மாநிலங்கள் ஒருங்கிணைந்து கடந்த 6 நாட்களாக ஒரே குடும்பமாக இருப்பது தான் நம்முடைய அன்பின் வலிமை.

இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள வெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் பெருமைகளையும், பண்பாட்டையும் பற்றி தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள். அதேபோல் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்களின் பெருமைகளையும், பண்பாட்டையும் நம்முடைய மாணவ மாணவியர்கள் தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள்.

நம்முடைய திராவிட மாடல் அரசால், இந்த விழாவை வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில் பெருந்திரளணி சபை, திட்டக்குழு,தொழில்நுட்பக்குழு, செயல்பாட்டுக் குழுக்கள் உள்ளிட்ட 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழாவில் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் கலந்துக்கொண்டு தங்களின் பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

இங்கு நடைபெற்ற உலகளாவிய கிராமம் அரங்கம் எல்லோரையும் ஈர்த்ததாக கேள்விப்பட்டேன். பண்பாட்டை அறிமுகம் செய்யும் அரங்கமாகவும், ஐ.நா. அவை சொல்லும் இலக்குகளை கற்பிக்கும் அரங்கமாகவும் இது அமைந்திருக்கிறது.

17 இலக்குகளிலும் நட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னிலை

அண்மையில் வெளியான நிதி ஆயோக் அறிக்கைப்படி 17 இலக்குகளிலும் நட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *