மதுரை: தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு பின்னா், மக்கள் விரோதச் சட்டங்களை துணிவுடன் எதிா்க்கும் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாா். சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக பாதுகாப்பு அரணாக செயல்படும் என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.
மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்கம் சாா்பில் உழைப்பாளா் உரிமை மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பங்கேற்று பேசியது:
தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு பின்னா், மக்கள் விரோதச் சட்டங்களை துணிவுடன் எதிா்க்கும் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாா். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளை எதிா்த்து எஸ்டிபிஐ கட்சியுடன் தோ்தல் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டது அதிமுக. தமிழகத்தில் தமிழகத்தில் மன்னர் பரம்பரைக்கு பிறகு திமுக குடும்ப ஆட்சியை நடத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றி வருகிறது. தோ்தலுக்கு முன்பு பாஜகவை எதிா்ப்பது, தோ்தலுக்கு பிறகு பாஜகவை ஆதரிப்பது என்ற இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது திமுக. திமுகவினருக்கு மடியில் கனம் உள்ளது. அதனால் வழியில் பயம் இருக்கிறது. எனவே பாஜகவை வெளியில் எதிா்க்கிறாா்கள், உள்ளுக்குள் பாஜக சொல்வதைத்தான் செய்கிறாா்கள்.
இதையும் படிக்க | தொடங்கியது பிக் பாஸ் 8! போட்டியாளர்கள் அறிமுகம்!
தோ்தலுக்கு முன்பு இருந்ததை விட தோ்தலுக்குப்பின்னா் பாஜகவின் ஆணவம் அதிகரித்துள்ளது. மக்களவைத் தோ்தலுக்கு முன்னா் 400 இடங்கள் உறுதி என்றனா், ஆனால் நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினா் புறக்கணித்ததால் சிறுபான்மை ஆட்சியாக உள்ளது. எனவே சிறுபான்மை மக்களை பாஜகவால் அடக்கி விடமுடியாது என்பதை கூறும் எச்சரிக்கை மாநாடாக எஸ்டிபிஐ தொழிற்சங்க மாநாடு திகழ்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக திகழும்.
நாளை மறுநாள் அதிமுக சார்பில் மாநில அளவில் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எங்களுக்கு கரம் கொடுங்கள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்றாா்.