மணமக்களை அடையாளம் காண திண்டாடிய நண்பர்கள்: இரட்டை சகோதரிகளுக்கு இரட்டை சகோதரர்களுடன் திருமணம் | Friends struggle to identify brides: Twin sisters marry twin brothers-

Spread the love

தெலங்கானாவில் இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறது.

அங்குள்ள காமாரெட்டி மாவட்டத்தில் தெமிகலன் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் கீர்த்தனா, கீர்த்தி. இரட்டை சகோதரிகளாக இவர்களுக்கு இரட்டையர்களாகப் பிறந்த சகோதரர்களைத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

அவர்கள் நினைத்தது போன்று பக்கத்தில் உள்ள கன்பூர் என்ற கிராமத்தில் இரட்டை சகோதரர்கள் விஜய் மற்றும் வினய் இருந்தனர்.

இரட்டை சகோதரர்களுக்கு அவர்களின் பெற்றோர் திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்தனர். பக்கத்து கிராமத்தில் அதேபோன்று இரட்டை சகோதரிகள் இருப்பது கேள்விப்பட்டு அங்கு சென்று கீர்த்தனா மற்றும் கீர்த்தி சகோதரிகளைத் தங்களது மகன்களுக்குத் திருமணம் செய்ய பெண் கேட்டனர்.

இரட்டை சகோதரர்கள்

இரட்டை சகோதரர்கள்

இதையடுத்து இரு குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர்கள் நான்கு பேரும் மணமேடையில் வந்து அமர்ந்தபோது வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இரட்டை சகோதரிகளை ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான ஆடைகள், தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தனர்.

இதே போன்று இரட்டை சகோதரர்களான மணமகன்களும் ஒரே மாதிரியான ஆடை மற்றும் அலங்காரத்துடன் அருகருகே மணமகன்களாக அமர்ந்திருந்தனர். அவர்களின் இத்திருமணத்தைக் காண பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இரட்டை சகோதரர்களின் நண்பர்கள் இதில் தங்களது நண்பர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரி இருந்தனர். இத்திருமணம் மிகவும் அபூர்வமான ஒன்றாகக் கருதப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *