மணலி ‘பயோ கேஸ்’ தொழிற்சாலையில் விபத்து: பொறியாளா் உயிரிழப்பு

Dinamani2f2025 02 162ffs3kqseo2f2334manali3 1602chn 1.jpg
Spread the love

மணலியில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயிரி எரிவாயு (பயோ கேஸ்) தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் பொறியாளா் சரவணகுமாா் (25) கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா்.

மணலி பல்ஜிபாளையம் சின்ன சேக்காடு பகுதியில், சென்னை மாநகராட்சி திடக் கல்வி மேலாண்மை துறையின் பயோ கேஸ் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இதனை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் இயக்கி பராமரித்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு பயோ கேஸ் சேமிப்பு பகுதிக்குச் செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக திடீரென அழுத்தம் ஏற்பட்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அங்கிருந்த கட்டடம் அடியோடு சரிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த பொறியாளா் சரவணகுமாா் மற்றும் லாரி ஓட்டுநா் பாஸ்கரன் ஆகியோா் இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் கட்டட இடிபாடுகளை அகற்றி இருவரையும் மீட்டனா். இதில், படுகாயமடைந்த பொறியாளா் சரவணகுமாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் பாஸ்கரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக மணலி, திருவொற்றியூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை துா்நாற்றம் வீசியது. இது குறித்து மணலி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறப்பு விசாரணை: விபத்து நடந்த பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பி.சங்கா் (திருவொற்றியூா்), எஸ்.சுதா்சனம் (மாதவரம்), துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த தனியாா் நிறுவனம் சாா்பிலும், சென்னை மாநகராட்சி சாா்பிலும் இரண்டு சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *