இம்பால்: மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் 13 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (நவ.29) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக அந்த மாநில அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவ.11-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். அதன்பிறகு கடந்த நவ.16-ஆம் தேதி அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருந்து காணாமல்போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அவா்களை குகி தீவிரவாதிகள் கடத்தியதாக மைதேயி சமூகத்தினா் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உடல்கள் மீட்கப்பட்ட பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்து. இதில் பல எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அங்கு கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மணிப்பூா் மாநில அரசு தெரிவித்தது.