மண் சரிவால் 6 நாட்களாக தடைபட்ட மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Mettupalayam – NIlgiris mountain rail service resumes after 6 days

1291637.jpg
Spread the love

கோவை: சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று (ஆக.7) காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலைரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக ஹில்குரோ-அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாள பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளோடு புறப்பட்ட மலை ரயில் மலையடிவார பகுதியான கல்லார் ரயில் நிலையம் வரை சென்று விட்டு மேற்கொண்டு பயணிக்க இயலாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே கொண்டு வரப்பட்டு அதில் இருந்த பயணிகள் வேறு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, மண்சரிவு சீரமைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளதால் கடந்த 1-ம் தேதி முதல் நேற்று 6- ம் தேதி வரை 6 நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், நேற்று (ஆக.6) மாலை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று (ஆக.7) காலை 7.10 மணிக்கு வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் உலக பாரம்பரிய சின்னமான மலை ரயிலில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *