மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு | Mallai Sathya permanently removed from MDMK: Vaiko

1375801
Spread the love

சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.

சில காலமாகவே மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் மல்லை சத்யா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) அவரை நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சி.ஏ.சத்யா ஆகிய தங்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைஉறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என 17-08-2025 அன்று விளக்கம் கேட்டு கழக சட்டதிட்டங்கள் படி – நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன்.

அந்த அறிவிப்பை, 19-08-2025 அன்று பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, 24-08-2025 தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், 27-08-2025 அன்று பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப் பெற்றேன்.

தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 06-09-2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்க வில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்க வில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத் தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5, விதி-19, பிரிவு-12, விதி-35, பிரிவு-14, விதி-35, பிரிவு-15 இன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *