சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வரும் நபர்களை காவல் குழுவினர் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (10.02.2026) காலை சாலிகிராமம், ஆற்காடு ரோட்டிலுள்ள டாஸ்மாக் அருகே கண்காணித்தபோது, அங்கு 4 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜீவானந்தம், தேவேந்திரன், ஹரிகிருஷ்ணன், ஷேக் முகமது ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 ml அளவு கொண்ட 917 மதுபாட்டில்கள், 650 ml அளவுகொண்ட 63 பீர்பாட்டில்கள் என மொத்தம் 980 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூ.56,370 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஜீவானந்தம் டாஸ்மாக் பாரின் பொறுப்பாளர் என்பதும், மற்ற 3 பேரும் பாரில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் ஜீவானந்தம் மீது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (10.02.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
