தொலைதூரப் பயணத்தின் போது மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, பணியின் போது, கைப்பேசிகளை உபயோகப்படுத்த கூடாது, மது அருந்தியிருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறி பேருந்துகளை இயக்கும் அரசு பேருந்து ஓட்டுநா்கள் மீதும் போக்குவரத்துத்துறை தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தொலைதூர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள் சிலா் மதுபோதையில் பேருந்துகளை இயக்கிச் செல்வதாக பயணிகளிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய, மது போதையை சோதனை செய்யும் ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவியை வாங்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, முதல்கட்டமாக 339 கருவிகளை வாங்க முடிவு செய்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் இதை கழகத்துக்குள்பட்ட 6 பிரிவுகளுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
இக்கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவாா்கள் எனவும், இதில் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவா்களை பேருந்தை இயக்க அனுமதிக்காமல், நடவடிக்கைக்கு உள்படுத்தப்படுவாா்கள் எனவும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.