சென்னை: தாம்பரம் அருகே மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்து செங்கல்பட்டு ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தாம்பரம் அருகே மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக வேல்முருகனும், துணை தலைவராக புருஷோத்தமனும் பதவி வகித்து வருகின்றனர். தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இருவரும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில் ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம், அடிப்படை பணிகளுக்கு நிதி விடுவிக்கப்படாதது, குடிநீர், தெரு விளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் மற்றும் வங்கி பணப்பரிவர்த்தனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.
ஆட்சியரின் இந்த உத்தரவை எதிர்த்து ஊராட்சி மன்றத் தலைவரான வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இது தொடர்பாக ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.