மதுரவாயல் – துறைமுகம் இரண்டடுக்கு 4 வழி உயர்மட்ட சாலையின் நிலை: பேரவையில் அமைச்சர் விளக்கம் | TN Minister E.V.Velu talks on Maduravoyal 4 lane Road Project

1356653.jpg
Spread the love

சென்னை: மதுரவாயல் – துறைமுகம் வரையிலான இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்டச் சாலைப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுரவாயல் – துறைமுகம் மேம்பாலப் பணிகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, ”மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்பதால் அந்த மேம்பாலத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும். கடந்த 17 ஆண்டுகளாக இப்பாலப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. மதுரவாயல் வரை செல்லும் இப்பாலத்தை பூந்தமல்லி வெளிவட்டச் சாலை வரை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் நெல்சன் மாணிக்கம் சாலையுடன் இப்பாலத்தை இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசும்போது, ”பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னைத் துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்டச் சாலையை அமைத்து வருகிறது. மும்பை நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தின்படி 2027 பிப்ரவரியில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட வேண்டும். இத்திட்டம் தொடர்பாக நீர்வளத்துறையால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு காரணமாக பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

இத்திட்டப் பணிகள் 4 தொகுப்புகளைக் கொண்டது. மொத்தமுள்ள 5,296 தூண் அமைக்கும் பணிகளில் 812 முடிக்கப்பட்டுள்ளது. 882 பைல்கேப் (Pilecap) அமைக்கும் பணிகளில் 41 முடிவடைந்திருக்கிறது. இத்திட்டப்படி மேம்பாலத்தில் மேல்பகுதி, கீழ்பகுதி என இரண்டு அடுக்கு இருக்கும். மேல்பகுதி மதுரவாயலில் இருந்து துறைமுகத்துக்கு செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக போகும் வகையில் அமைக்கப்படும். கீழ்பகுதியில் 6 இடங்களில் இறங்கு பாலங்களும், 7 இடங்களில் ஏறு பாலங்களும் அமைக்கப்படும்.

மேல் தளத்திற்கான பாகங்கள் தனியாக 2 இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 9,415 பாகங்களில் 14 முடிவடைந்துவிட்டது. இத்திட்டப் பணிகளை மாதந்தோறும் நான் ஆய்வு செய்து வருகிறேன். இந்த மேம்பாலம் கூவம் ஆற்றில் 15 கிலோ மீட்டர் செல்கிறது. தேவைப்படும் இடங்களில் மின்கம்பத்தை மாற்றி அமைப்பது, போக்குவரத்தை திருப்பி விடுவது உள்ளிட்ட பலவகையான பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, குறித்த காலத்திற்குள் மேம்பாலப் பணிகளை முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *