மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் 506 ஏக்கர் திடலில் ஆக. 25-ம் தேதி தவெக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் விழா நேற்று காலை நடந்தது.
கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், சிறப்பு பூஜைகளுடன் பந்தல்கால் நடப்பட்டது. மதுரை மாவட்டச் செயலாளர்கள் கல்லாணை என்ற விஜயன்பன், தங்கப்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், ஆனந்த் தலைமையிலான கட்சி நிர்வாகிகள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று, மாநாடு நடத்த அனுமதி கோரி எஸ்.பி. அரவிந்திடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆனந்த் கூறியதாவது: மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை ஆக. 25-ம் தேதி நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் மாநாட்டில் பங்கேற்றவர்களைவிட 2-வது மாநாட்டில் அதிக அளவிலானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம்.
விஜயகாந்த் பிறந்த நாளில் மதுரையி்ல் மாநாடு நடத்தப்படுகிறதா என்று கேட்கிறீர்கள். அதுகுறித்து எங்களுக்கு தெரியாது. எதுவானாலும் தலைவர் விஜய் முறைப்படி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.