மதுரை: மதுரையில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் இரண்டு விமானங்கள் வானில் வட்டமடித்தன. 40 நிமிட தாமதத்துக்கு பின்பு இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறங்கின.
மதுரையில் அடுத்தடுத்து கனமழை பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்று இரவு 8.30 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 30 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த விமானமும் மற்றும் பெங்களுருவில் மதுரை வந்த விமானமும் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றன. பலத்த இடிமின்னலுடன் பெய்த கனமழையால் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க சிக்னல் கிடைக்காமல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் வானத்தில் வட்டமிட்டது.
இதனால் இரு விமானத்திலும் பயணித்த பயணிகள் அச்சத்தில் இருந்தனர். சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு போதிய சிக்னல் கிடைத்த பின் இரு விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. இதன்படி இரவு 8.20 மணிக்கு மதுரையில் தரையிறங்க வேண்டிய சென்னை – மதுரை விமானம் 9.10 மணிக்கும், 9.20 மணிக்கு தரையிறக்க வேண்டிய பெங்களூர் – மதுரை விமானம் 9.20 மணிக்கும் என, 40 நிமிட தாமத்திற்கு பின்னர் தரை இறக்கப்பட்டன. இதன் பின்தான் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.