கரூரில் சம்பவத்துக்கு பிறகு நாங்கள் ஓடிவிட்டோம் என்றார்கள். நாங்கள் ஓடவில்லை. காவல்துறை தான் எங்களை திரும்பி வரவேண்டாம் என்றார்கள் என்றும், கரூர் விவகாரத்தின் மூலம் தவெகவை முடக்க திமுக முயற்சி செய்ததாகவும், ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி உள்ளார்.
கரூர் துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று கூறியதாவது: தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு, எந்த மாவட்டத்திலும் காவல்துறை பெரிதாக ஆதரவு தந்தது கிடையாது. ஆனால், அரியலூர், பெரம்பலூரில் காவல்துறை ஆதரவு தந்தார்கள். பெரம்பலூரில் எஸ்.பி எங்களுக்கு முன்னெச்சரிக்கையாக பல தகவல்களை கொடுத்தார். அதனால், தான் கடைசி நேரத்தில் பெரம்பலூர் பயணத்தை ரத்து செய்ய முடிந்தது. ஆனால், கரூர் காவல்துறை, முன்னாள் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நாங்கள் காவல்துறை சொன்ன நேரத்துக்குள், அதாவது மதியம் 3 முதல் இரவு 10 மணிக்குள் அவர்கள் அனுமதி தந்த இடத்துக்கு சென்றுவிட்டோம். கரூருக்குள் நாங்கள் நுழையும் போது, காவல் துறை தான் எங்களை வரவேற்றார்கள். அவர்கள் தான் எங்களை திட்டமிட்ட இடத்துக்கு அழைத்து சென்று, பிரச்சாரம் செய்ய வைத்தார்கள். இது வேறு எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. கரூரில் மட்டுமே நடந்தது.
தவறுகள் எங்கள் மீது இருந்திருந்தால், கரூர் மாவட்ட எல்லையிலேயே காவல்துறை ஏன் எங்களை வரவேற்க வேண்டும்? மேலும், இந்த இடத்தை காவல்துறை தான் எங்களுக்கு வலுக்கட்டாயமாக ஒதுக்கினார்கள். அதற்கான ஆதாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுப்போம். எங்களுக்கு தமிழக அரசின் மீது, தமிழக அரசின் விசாரணை அமைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை. ஏனென்றால், இந்த சம்பவத்துக்கு பிறகு, நாங்கள் அனைவரும் ஓடிவிட்டோம் என்றார்கள். உண்மையில் நாங்கள் ஓடவில்லை.
எங்களது செல்போன் சிக்னலை வேண்டுமானாலும் ஆய்வு செய்யுங்கள். விஜய்யை அனுப்பிவிட்டு, நாங்கள் கரூர் மாவட்ட எல்லையில் தான் இரவு முழுக்க காத்திருந்தோம். காவல்துறை தான் எங்களை சம்பவ இடத்துக்கு வர வேண்டாம் என வலியுறுத்தினார்கள். நாங்கள் உள்ளே வந்தால், கலவரம் வரும், பிரச்சினை வரும் என சொல்லி, காவல்துறை எங்களை தடுத்துவிட்டது. பின்னர் திட்டமிட்டு, தவெக நிர்வாகிகள் மீது தடியடி நடத்தினார்கள். தீவிரவாதிகளை போல எங்களை சித்தரித்தார்கள். இது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் பதிவு செய்வோம்.
இத்தனை உயிரிழப்புகளை கண்டு அடுத்த 4 நாட்கள் என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை திமுக பயன்படுத்தி என்னென்னமோ நாடகமாடினார்கள். அடுத்த ஒரு வாரம் நீதிமன்றம் விடுமுறை. இதனால், எங்களால் சட்டம் ரீதியாகவும் முறையிட முடியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என யாராவது பேட்டி கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இந்த பிரச்சினையை வைத்து ஒட்டு மொத்த கட்சியையும் முடக்க திமுக முயற்சித்தது.
மேலும், அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடக்கும்போதே, தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தது ஏன்? கட்சியை முடக்கக்கூடிய ஒரு ஜனநாயக படுகொலையையும், அவசர நிலையையும் சட்ட ஒழுங்கு மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடக்கும் போது, மாநில அரசும் இந்த விசாரணையை தொடர்ந்தால், தவெக மட்டுமே இந்த விவகாரத்தில் தவறு செய்தது என்ற ஒரு அரசியலை திமுக உருவாக்கும். கரூர் காவல்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில் மதுரைக்குள் சென்றால், காலை வெட்டுவோம் என்பார்கள்.. மதுரை எங்க கோட்டை என்று ரவுடித்தன அரசியல் செய்வார்கள். ஆனால் இன்று அழகிரி அண்ணன் அரசியலிலேயே இல்லை. அந்த மாதிரி கரூர் விரைவில் சுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.