மதுரையில் தவெக மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்! | Arrangements Work at TVK’s Madurai State Conference

1372812
Spread the love

மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொண்டர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்.

தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து மதுரை அருகே பாரப்பத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேடை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேடையிலிருந்து தொண்டர்களிடையே நடந்து செல்லும் விதமாக 1,000 அடி நீளத்தில் தனி மேடை அமைக்கப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்து மதுரை மாவட்ட காவல்துறை 42 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியது. இதற்கான விளக்கங்களை கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மாநாட்டில் 1.20 லட்சம் ஆண்கள், 25 ஆயிரம் பெண்கள், 4,500 முதியவர்கள், 500 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதியில்லை. மாநாட்டுத் திடலில் 1 லட்சம் நாற்காலிகள் போடப்படும். மாநாட்டில் பங்கேற்போருக்கு சிறப்பு அனுமதி சீட்டு என எதுவுமில்லை. மாநாட்டுக்கு எளிதாக வந்து செல்ல 18 வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.

17549840973055

பெண்கள், முதியவர்களுக்கென தனி இருக்கைகள் அமைக்கப் படும். பெண்கள் பாதுகாப்புக்கென பெண் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர். மாநாட்டுக்கு வருவோருக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரவர் விருப்பத்துக்கேற்ப உணவு ஏற்பாடு செய்து தருவர்.

மாநாட்டு பகுதியில் 400-க்கும் மேலான தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவம், ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்படும். 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். மாநாட்டுக்குரிய மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே பெறப்படும். மாநாட்டு திடலில் 20 ஆயிரம் மின் விளக்குகளும், தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் கல்லாணை கூறுகையில், ‘கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆலோசனையின் பேரில் மாநாட்டு ஏற்பாடுகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. மாநாடு குறித்த ஆட்டோ பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். ஓரிரு நாளில் காவல் துறையின் முறையான அனுமதி கிடைத்துவிடும் என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *