மதுரையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை விமான நிலையம் அருகே வெளிப்புற வட்டச்சாலையில் வேகமாக வந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து இந்த விபத்தில் சிக்கியதாகவும் இதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க முடியாமல், கிரேன் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியோடு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.