16 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் மாணவ-மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேரணி உள்ளிட்டவற்றை நடத்துமாறு மதுரை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
இதன் அடிப்படையில் மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் நடைமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு புதிய முயற்சி நடந்தது.
Al தொழில்நுட்பத்துடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடியைப் பயன்படுத்தி மாணவர் தலைவர் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு அமைச்சரவையை ஒதுக்கி மாணவர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வருகின்றனர்.
இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன் நம்மிடையே பேசும்போது, “செப்டம்பர் மாதம் இந்தப் பள்ளியினுடைய தலைமை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அந்தச் சமயத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவதற்கான அறிவிப்பு வந்தது. அதன் படி விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டி, கவிதை, பேச்சுப் போட்டி நடத்தி அதற்கான முடிவுகளும் தயாராக இருக்கின்றன.

நாங்கள் புதிய முயற்சியாக வாக்குச்சாவடியில் என்ன நடக்கிறது, வாக்காளருடைய உரிமைகள் என்னென்ன, எப்படி ஓட்டு போட வேண்டும், நாம் ஓட்டு போடுவதன் மூலம் எப்படி தலைவர்கள் உருவாகிறார்கள் என்பது குறித்து சொல்லி தருகிறோம்.
இதற்காக அவர்களுக்கு ஒரு நிஜ வாக்குச்சாவடி மாதிரி ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். அதில் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் எல்லோரும் இருப்பது போன்று தயார் செய்து இருக்கிறோம்.