அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம்.
புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 400 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்.
அதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 31 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

காலை உணவுத் திட்டத்தில் 59 ஆயிரத்து 394 பள்ளிக் குழந்தைகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 8 இலட்சத்து 60 ஆயிரம் நபர்களும் பயனடைந்துள்ளனர்.
“இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் நபர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டங்களில் மூன்று இலட்சம் மாணவ–மாணவிகளும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 75 ஆயிரத்து 597 பேரும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 22 ஆயிரத்து 766 நபர்களும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் 86 ஆயிரத்து 130 பேரும் பயனடைந்துள்ளார்கள்.
முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம்.
‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் 341 குழந்தைகளை பாதுகாத்துள்ளோம். மேலும், 4 ஆயிரத்து 196 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம்.
மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பயனாளிகள் உள்ளார்கள் என்று பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால், இந்த ஒரு நிகழ்ச்சி போதாது.
ஒவ்வொரு நாளும் இத்தனை லட்சம் மக்கள் பயனடைவது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெரிச்சலிலும் ஆற்றாமையிலும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள்.