மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கலையரசி உடல் பருமனாக இருந்துள்ளார். இதனால் அவருடைய உடல் எடையைக் குறைப்பது தொடர்பாக யூடியூப்பில் சில வீடியோக்கள் பார்த்துவிட்டு, கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றுக்குச் சென்று பொருட்களை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் உடனடியாக கலையரசியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
பின்னர் இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கலையரசி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இது குறித்து கலையரசியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மாணவி எந்த மாதிரியான நாட்டு மருந்தை உட்கொண்டார் என்பது பற்றி சம்பந்தப்பட்ட நாட்டு மருந்துக் கடையில் விசாரணை நடத்தி வருகின்றனர்
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ஒவ்வொருவருடைய உடல்நிலைக்கு ஏற்றவாறுதான் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். யூடியூபில் வரும் வீடியோக்களைப் பார்த்துவிட்டு மருந்துகளை எடுத்துக் கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
எந்த ஒரு மருந்தும் மருத்துவர்களின் பரிந்துரையோடு உட்கொள்வது மட்டுமே பாதுகாப்பானது” என்றனர்.