டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக மதுரை மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வந்ததையடுத்து, டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அ.வள்ளாலப்பட்டியில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவின்போது, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது, “பிரதமர் மோடி அரசியல்தாண்டி, உண்மையில் தமிழ் மக்கள், தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மீது அதீத அன்பு கொண்டுள்ளார். உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமை, கலாசாரம், அவற்றின் சிறப்புகளையும் பிரதமர் மோடி சொல்லி வருகிறார். ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் முன்னிலையில், தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு உலகத்தில் ஜனநாயகத்துக்கு முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோலை அமைத்ததன்மூலம், தமிழர்களின் கலாசாரம், பெருமைகளை பிரதமர் மோடி உலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.