அங்கு அன்னைக்குக் காவலாக ஐயனாரும் எழுந்தருளினார். தன் வாகனமாகிய குதிரையை அம்மனுக்கு நிழலாக நிற்கும்படிப் பணித்து தானும் அங்கே அடைக்கலம் காத்த ஐயனாராக எழுந்தருளினார்.
இங்கு வந்து வேண்டிக்கொண்ட பக்தர்களுக்கு அன்னை காளி நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம். நோய்நொடிகள், எதிரிகளின் தொல்லைகள், வறுமை, கடன் தொல்லை என்று பல்வேறு துன்பங்களோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்னைக் காளி அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒருமுறை வந்து வேண்டிக்கொண்டாலே தீராத வினைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.
காளியம்மனுக்கு வடக்கே இருக்கிறது சத்தியக்கல். இரு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தக் கல்லில் இருவரும் சூடத்தை ஏற்றி, `காளி சத்தியமா நாங்க தப்பு செய்யவில்லை” என்று சத்தியம் செய்யவேண்டும். இருவரும் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு, காளியம்மனுக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடித்து, தப்பு செய்யவில்லை என ஒப்புக் கொடுக்க வேண்டும். அதுக்கு முன்னதாக, தப்பு செய்தவர்கள், ஒப்புக்கொண்டால் பிழைத்தார்கள். இல்லை என்றால் பொய் சத்தியம் செய்தவரைக் காளி உண்டு இல்லை என்று செய்துவிடுவாளாம். `தண்டிப்பதில் இவள் கறாரானவள் என்பதால் இவளிடம் யாரும் பொய் சொல்வதில்லை’ என்கிறார்கள் ஊரார். தப்பு செய்தவர், இங்கு வந்த உடனே மனம் திருந்தி பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டு நிவாரணம் செய்த கதைகளும் அநேகம் உண்டாம்.
வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை மடப்புரம் சென்று அன்னை பக்தரகாளியை வழிபாடு செய்து வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.