மதுரை மேயர் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்: 5 நிமிடங்களில் முடிந்த கூட்டம்! | Councillor approval Madurai Mayor resignation resolution

1380097
Spread the love

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சி வரலாற்றிலே 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் முடிந்தது.

மதுரை மாநகராட்சி திமுக மேயராக இருந்த இந்திராணி, 2 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். உள்ளூர் அரசியல் சூழ்நிலை காரணமாக புதிய மேயரை தேர்வு செய்வதில் இன்னும் சிக்கல்கள் நீடிப்பதால் உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மேயர் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்காக, சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, 100 வார்டு கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கூட்டம் இன்று காலை 10.26 மணிக்கு நடந்தது.

மாமன்ற மேடையில் மேயர் இருக்கை அப்புறப்படுத்தப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் அமருவதற்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மேயர் முன்பு மேடையில் வைக்கப்பட்டிருக்கும், செங்கோலும் இல்லை. மேயர் பதவியை ராஜினாமா செய்ததால் கூட்டத்திற்கு இந்திராணி வராமல் புறக்கணித்தார்.

கூட்டம் தொடங்கியதும், அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா எழுந்து, ‘‘சொத்துவரி விதிப்பு முறைகேடு விவகாரத்தில் அதிமுக, மேயர் இந்திராணியை ராஜினாமா செய்யக்கோரி தொடர்ந்து பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தி வந்தனர். போராட்டமும் நடத்தினோம். தற்போது மேயர் ராஜினாமா செய்துள்ளது, எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம், ’’ என்றார்.

அதற்கு திமுக கவுன்சிலர்கள் குழு தலைவர் மா.ஜெயராம் தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. சொத்துவரி முறைகேடுகள், அதிமுக ஆட்சியில்தான் நடந்துள்ளது. உங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை பற்றியும் விசாரித்து உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றனர். இரு தரப்பினரும் எழுந்து நின்று ஒருவர் மீது மற்றொருவர் குற்றம்சாட்டி கூச்சல் போட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

ஆணையாளர் சித்ரா, தலையீட்டு, தீர்மானம் வாசிக்க வேண்டிய உள்ளது, அமைதி காக்கும்படி கூறினார். தொடர்ந்து மாமன்ற செயலாளர், ‘‘மேயர் இந்திராணி தனது குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா மன்ற பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஒப்புதல் வழங்க வேண்டும், ’’ என்றார்.

இதுவரை கூட்டத்திற்கே வராத முன்னாள் தலைவர்கள், கவுன்சிலர்கள் பலர், கூட்டத்தில் ஏதாவது கடைசி நேரத்தில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் வேடிக்கைப்பார்க்க வந்திருந்தனர். ஆணையாளர் சித்ரா, மேயர் ராஜினாமா தீர்மானத்தை வாசித்து முடிந்ததும், துணை மேயர் நாகராஜனை விட்டு, யாரும் எதிர்பாராத வகையில் கூட்டம் முடிந்ததாக அறிவிக்க வைத்தார்.

மதுரை மாநகராட்சி வரலாற்றிலே இதுவரை இல்லாத வகையில் காலை 10.26 தொடங்கிய கூட்டத்தை 5வது நிமிடத்திலே 10.30 மணிக்கு சாமர்த்தியமாக முடித்துவிட்டு ஆணையாளர் சித்ரா, கூட்டரங்கை விட்டு புறப்பட்டு சென்றார். அடுத்த நிமிடமே மாமன்ற கூட்டம் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், கூட்டத்தில் தங்கள் தரப்பதற்கு ஏதாவது பேச வேண்டும் என்று முன் தயாரிப்புடன் வந்திருந்தனர். கூட்டம் தொடங்கிய வேகத்தில் முடிந்ததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மேயர் இந்திராணி ராஜினாமா செய்ததால், உடனடியாக மேயர் பதவி இயல்பாகவே காலியானது. அடுத்த புதிய மேயர் நியமிக்கும் வரை துணை மேயரே, மேயரின் பணிகளை மேற்கொள்வார். அதற்கென்று தனியாக ‘பொறுப்பு’ என்ற அங்கீகாரம் வழங்க தேவையில்லை.” என்றனர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *