மதுரை விமான நிலைய பெயர் சர்ச்சை: இபிஎஸ்-க்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் | Dr.Krishnasamy condemns Edapadi Palanisamy over naming Madurai Airport

1375796
Spread the love

மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் என

எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை விமான நிலையம் – சின்ன உடைப்பு என்ற முழுக்க முழுக்க தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்ந்துவரும் கிராம மக்களின் நிலங்களிலேயே அமைந்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் ராணுவப் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையம், பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்திற்காக அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்பட்டது. விமான நிலையம் தொடங்கப்பட்டபோதும், விரிவாக்கம் செய்யப்பட்டபோதும் தேவேந்திர குல வேளாளர்களின் நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கே ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. பலர் தானமாகவும் நிலங்களை வழங்கியுள்ளனர்.

பொதுவாக, இதுபோன்ற தங்களது சொந்த நிலங்களை அரசு பயன்பாட்டிற்கு வழங்கும்போது, தனி நபர்களாக இருந்தால் அவர்கள் விரும்பும் குடும்பப் பெயர்களும், ஒரு கிராமம் அல்லது ஒரு சமுதாயமாக இருந்தால் அந்த சமுதாயம் விரும்பும் தலைவர்களின் பெயர்களும் சூட்டப்படுவது நடைமுறையாக உள்ளது.

அதன் அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் மனித உரிமையை மீட்கவும், தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தும், தமிழ் மண்ணிற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி இமானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதே சாலப் பொருத்தமானதாகும். மேலும், அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், ராணுவ வீரரும், எவ்விதக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத அப்பழுக்கற்ற மாமனிதரும் ஆவார்.

எனவேதான், மதுரை விமான நிலையத்திற்கு நிலம் தந்த சின்ன உடைப்பு மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் வாழுகின்ற இம்மண்ணின் மூத்த வேளாண் தமிழ்க் குடிகளான தேவேந்திர குல வேளாளர்களின் ஒருமித்த கருத்தும், மதுரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களுக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதாகும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மதுரையை மையமாகக் கொண்டு பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன; 2011 முதல் 2016 வரையிலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்துள்ளேன். மேலும், மதுரை விமான நிலையத்திற்குப் பெயரிடுவது குறித்துப் பேச்சு எழும்போதெல்லாம், இமானுவேல் சேகரன் பெயரையே அனைத்துத் தரப்பினரும் முன்மொழிந்துள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ஒட்டுமொத்த மக்களின் நலன் சார்ந்து பேசாமல், தேர்தல் நேரத்தில் பேச வேண்டியதை விடுத்து, குறுகிய எண்ணத்தோடு ஒருதலைப்பட்சமாக மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது குறித்துப் பேசியுள்ளார்.

ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தில் இது குறித்து எதுவும் பேசவில்லை. எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு அவசியமற்றது. தேர்தல் நேரத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓட்டை உடைசல்களைச் சரி செய்வதை விட்டுவிட்டு, வேறொன்றில் கால் வைக்க முயன்றால், எடப்பாடி அவர்களின் அரசியல் வாழ்விற்கு “உள்ளதும் போச்சடா லொள்ளக் கண்ணா” என்ற சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *