மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை நடத்திவிட்டு குஜராத்திற்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர். ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை காலை 6 மணியளவில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தவறான பாதையில் திரும்பியதால் விபத்து நிகழ்ந்தது. இதில் இசைக்குழு உறுப்பினர்களான ஹார்திக் டேவ் (37), பாடகர் ராஜா தாக்கூர் (28), அங்கித் தாக்கூர் (17), ராஜேந்திர சோலங்கி (47) ஆகியோர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், 17 பேருடன் வந்த மினி பேருந்தின் ஓட்டுநர், வாரணாசியில் இருந்து இடைவிடாமல் பயணித்ததால், சோர்வு காரணமாக மயக்கமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது என போலீஸ் அதிகாரி கூறினார். நான்கு பேரின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.