மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி; என்ன நடந்தது? | Student gets up halfway while writing the 10th class government public exam and gives birth in the toilet

Spread the love

மத்தியப் பிரதேசத்தில் தற்போது 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்குள்ள தார் மாவட்டத்தில் இருக்கும் பிதாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி 10வது பொதுத்தேர்வு எழுதினார்.

அவர் கணிதப் பாடத் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது திடீரென கழிவறை செல்ல வேண்டும் என்று பணியில் இருந்த ஆசிரியரிடம் அனுமதி கேட்டார். அவரும் மாணவிக்கு அனுமதி கொடுத்தார். மாணவி கழிவறைக்குச் சென்று 15 நிமிடங்கள் ஆன பிறகும் திரும்பி வரவில்லை. இதனால் ஆசிரியருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

உடனே பெண் உதவியாளர் ஒருவரை அனுப்பி மாணவியைப் பார்த்து வரும்படி ஆசிரியர் கேட்டுக்கொண்டார். பெண் உதவியாளர் அங்கு சென்று பார்த்தபோது கழிவறை கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

உடனே பெண் உதவியாளர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மாணவி மற்றும் அவருக்குப் பிறந்த குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவறை சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்று குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் குழந்தை மற்றும் மாணவியைச் சோதித்த போது இருவரும் நன்றாக இருப்பது தெரிய வந்தது. மாணவி கர்ப்பமாக இருந்தது அவரது குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாமல் இருந்தது.

விசாரணையில் அம்மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளாக பர்மன் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதில் அவர்களுக்குள் உறவு ஏற்பட்டு மாணவிக்கு குழந்தை உருவாகி இருக்கிறது. இது குறித்து மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பர்மனைத் தேடி வருகின்றனர்.

இது குறித்து தேர்வு மையத் தலைவர் நரேந்திர குமார் போத்தே கூறுகையில், திடீரென கழிவறைக்குச் சென்ற மாணவி திரும்பி வராததால், ஊழியரை அனுப்பி சோதித்தோம். உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தேர்வு நடக்கும்போது இந்தச் சம்பவம் நடந்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தோம்”‘ என்றார். போலீசார் சிறுமியின் குடும்பத்தாரிடம் பேசி கூடுதல் தகவல்களைப் பெற்றுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *