இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் வெள்ளிக்கிழமை குஜராத்தில் இருந்தேன். அன்று கோத்தாலி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கோருவதற்காக என்னை என் மகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மெய்க்காப்பாளர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அங்கு செல்லுமாறு நான் கூறினேன். அங்கு சென்றபோது எனது மகளையும் அவளது நண்பர்களையும் சில நபர்கள் பிடித்து தள்ளியதுடன் அவர்களை புகைப்படம் மற்றும் விடியோவும் எடுத்துள்ளனர்.
இதே நபர்கள் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின்போதும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக என் மகள் தெரிவித்தாள். இது துரதிருஷ்டவசமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது மத்திய அமைச்சரின் மகளுக்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் சாமானிய மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுடனும், காவல் துறை கண்காணிப்பாளருடனும் பேசியுள்ளேன் என்றார்.
இச்சம்பவம் குறித்து முதல்வர் ஃபட்னவீஸ், ராய்கட் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் “கட்ஸேயின் மகளை துன்புறுத்தியவர்கள் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலரை உள்ளூர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.