சென்னை: இலங்கை அரசிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பதற்கு கடிதம் எழுதுவதை தவிர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினம் இன்று (ஆக. 3) கடைபிடிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அமைப்பு செயலாளர்கள் சி பொன்னையன், டி ஜெயக்குமார் உள்ளிட்டோர், தீரன் சின்னமலையின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி .ஜெயகுமார், “முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்துக்கான மறைமுகத் திட்டம் என்ன என்பது கடவுளுக்குத்தான் தெரியும். மின்கட்டண உயர்வால் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளில் தொழில்கள் கடுமையாக முடங்கியுள்ளன.
தமிழகத்தில் மீன்பிடி தொழில் என்பது பாதுகாப்பானதாக இல்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை தோற்ற ஒரே காரணத்தால் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்களை தொடர்ந்து சிறைபிடித்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுவதை தவிர வேறு எந்த அழுத்தமும் மத்திய அரசுக்கு இதுவரை கொடுக்கவில்லை” என குற்றம் சாட்டினார்.