புதுடெல்லி: மீன்வளத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ.100 கோடி மதிப்பில் 125-க்கும் மேற்பட்ட மீன்வள திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளன. இதனை மதுரையில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் தொடங்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. மீன் சில்லறை விற்பனையகம், இறால் குஞ்சு பொரிப்பகம், அடைகாக்கும் வங்கிகள், அலங்கார மீன்கள், பயோஃப்ளாக் அலகுகள், மீன் தீவன ஆலைகள், மீன் மதிப்புக்கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் புதிய மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கால்நடைத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.