கோவை: தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கான பாராட்டு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சட்டப்பேரவை தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசினார். திமுகவில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். 2047-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.
ஜிஎஸ்டி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி வருவாய் கடந்த ஆண்டை விட அதிகமாகவே வசூல் ஆகியுள்ளது. அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி குறித்த சுமூக முடிவுகள் எடுக்கப்படும். தமிழகத்தில் குறு, சிறு நிறுவனங்கள் மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சார கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பிட்டு பேசுவது சரியான ஒப்பீடு அல்ல. குறிப்பாக, திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் விவசாய நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் பெரும் அளவு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பாஜகவின் விவசாயப் பிரிவு சார்பில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய உள்துறை அமைச்சரை கோவைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கோவையில் பாஜகவின் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அந்தந்த கட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த தகவல்களை மாநில தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
திமுகவில் உள்ள குற்றப் பின்னணி கொண்டவர்கள் குறித்த அறிக்கையை இன்று வெளியிடுகிறேன். இதில் சுமார் 112 பேர் முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். மொத்தம் 18 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் திமுக பிரமுகர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஆதாரத்தோடு உள்ளது.
சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாக சொல்லும் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவில் உள்ள சமஸ்கிருத, இந்தி மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தி மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அதிகமாக இருப்பதால் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான பல்கலைக்கழகங்களை அதிகமாக உருவாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.