மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது: புதுச்சேரி முதல்வர் பாராட்டு | Union Budget reflects aspirations of people, says Pudhucherry CM Rangasamy

1349247.jpg
Spread the love

புதுச்சேரி: நாட்டின் நலனுக்கேற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களைக்கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்ட தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்து விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர்களை வகைப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது,

அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பை அதிகரிப்பது, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவது மற்றும் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் வசதிகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு பிரதம மந்திரி தன் தன்யா கிருஷி என்ற புதிய திட்டதை அறிவித்திருப்பது விவசாயத்தை மேலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல ஊக்குவிப்பதாக உள்ளது.

மேலும், விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது மற்றும் ஆண்டொன்றுக்கு 12.7 லட்சம் டன் உர உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பது போன்றவை விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும்.

குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் வரம்பை ரூ. 10 கோடியாக உயர்த்தியிருப்பது, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோருக்கான புதிய திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்தவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பிக்கையை அளிக்கும் வகையிலும் உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் இணைய வசதி மற்றும் ரூ.500 கோடி செலவில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் அமைத்தல் போன்றவை இந்தியாவில் கல்வி, மருத்துவத்தை டிஜிட்டல் முறைக்குக் கொண்டு செல்ல வழி வகுக்கும்.

ஐந்து ஆண்டுகளில், 75,000 மருத்துவ இடங்களைச் சேர்க்கும் இலக்கை நோக்கி, வரும் ஆண்டில், மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,000 இடங்கள் சேர்த்தல், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேர புற்றுநோய் மையங்கள் அமைத்தல், 2025-26 ஆம் ஆண்டில் 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் இந்திய சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டிருப்பது, ரூ.12 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்துக்கு வரிவிலக்கு, 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கு, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தல் மற்றும் தனியார் பங்களிப்புடன் மருத்துவச் சுற்றுலா மேம்படுத்துதல்,

காப்பீட்டுத் துறையில் அந்திய முதலீட்டு வரம்பு 74 சதவீதத்திலிருந்து நூறு சதவிதமாக அதிகரிப்பு, கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும் என்கிற அறிவிப்புகள் பெரிதும் பாராட்டுக்குரியது. மேலும், லித்தியம் பேட்டரிக்கான வரி குறைப்பால் மின்சார வாகனங்கள் மற்றும் கைப்பேசிகளின் விலை குறையும்.

நாட்டின் நலனுக்கேற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களைக்கொண்ட இந்த பட்ஜெட்டினை சமர்ப்பிக்க வழிகாட்டுதலாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து்ளளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *