தொடர்ந்து கிராம மக்கள் போராடி வரும் 100 நாள் வேலை திட்டத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, வேலைநாள்களை அதிகரிப்பது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலையளிப்பது போன்ற எந்த அறிவிப்பும் இல்லை. அதிகரித்து வரும் வேலையின்மை, ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதார மேம்பாடு, தொடர்ந்து உயர்ந்து வருகிற அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது, பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு விலை குறைப்பு உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் நலன்களுக்கான எந்த நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் இல்லை.
மத்திய அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்புகிற திட்டமும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. சமூகப் பாதுகாப்புடன்கூடிய வேலை வாய்ப்பினை உருவாக்க எந்த முயற்சியும் இல்லை. தொழிற்சங்கங்களின் கோரிக்கையான மாதம் ரூ. 26,000 குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த பட்ஜெட்டிலும் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காப்பீட்டுத்துறையில் தனியார் ஆதிக்கம் அதிகரித்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். மின்சாரத்தை தனியார்மயமாக்கிட மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.