மதுரை: மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலையைச் சேர்ந்த குருஜி. இவர் பாஜக மாநில பொறுப்பில் இருக்கிறார். தொண்டி பகுதியில் இந்து, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களாக பழகி வரும் சூழலில் அவர்களுக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக குருஜி முகநூல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இஸ்லாமிய மத போதகர்கள், தர்கா, ஹஜ்ரத் போன்றவை குறித்து மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அரசியல் காழ்ப்புணர்வுடன் வரலாறுகளை சித்தரித்து, கேவலமான பதிவுகளை முகநூலில் பதிவு செய்து வருகிறார். இது இஸ்லாமியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது, காயப்படுத்தியுள்ளது.
குருஜி தொடர்ந்து மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களுக்கு எதிராக கீழ் தரமான முகநூல் பதிவுகளை வெளியிட்ட வரும் பாஜக நிர்வாகி குருஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”மனுதாரரின் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ”புகார் அளித்து பல மாதங்கள் கடந்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகே வழக்கு பதிவு செய்துள்ளனர். குருஜி அவரது முகநூலில் இந்து – முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை உண்டு பண்ணும் விதமாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்” என்றார்.
இதையடுத்து நீதிபதி, ”எவ்வாறு இதுபோன்ற பதிவுகள் பதிவிடப்படுகிறது. மோசமான, பார்க்கவே சகிக்க முடியாத பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய இவ்வளவு தாமதம் ஏன்? இது போன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காவல்துறை அதற்கு நேர்மாறாக குண்டர் சட்டங்களை பயன்படுத்தி வருகிறது.
எனவே, இந்த வழக்கை வேறு விசாரணை பிரிவுக்கு ஏன் மாற்றக்கூடாது? ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்று மத மோதல்களை உருவாக்கும் நபர்களை விசாரணை செய்ய வேறு ஏதேனும் பிரிவு உள்ளதா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.