வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
எழுபத்தைந்து வயதை நெருங்கி விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,170 படங்களுக்கு மேல் நடித்து,பல இளைஞர்களின் மனதில், பாலாபிஷேகம் செய்கின்ற அளவுக்குப் பசுமையாய்த் தங்கி விட்டவர்! தன் ஐம்பது ஆண்டு காலத் திரைப்பட வாழ்வில்,பல சாதனைகளைப் புரிந்து,பல விருதுகளைப் பெற்றவர்!அவரின் பல கதாபாத்திரங்கள் மனதை நிறைத்தாலும்,மேஜிக் காட்டி மனதைக் கொள்ளை கொண்ட பாத்திரம் பாட்ஷாதான்!
“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!”என்ற பஞ்ச் வசனம் சிறப்புப் பெறக் காரணமே அதன் பாசிடிவ் அப்ரோச்தான்! நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராட ஆரம்பிக்கும் இரண்டு இளைஞர்களில் ஒருவர் அநியாயமாகக் கொல்லப்பட, உயிர் நண்பர் கொலைக்குப் பழி வாங்கி விட்டு, சமுதாயத்தைச் சீரழிக்கும் வில்லன் கூட்டத்திற்கு வில்லனாக மாறும் பாத்திரந்தான் நாயகன் ரஜினியுடையது.
“உனக்கும் எனக்குந்தான் சண்டை! ஒண்ணு நீ சாகணும்!இல்ல நான் சாகணும்!
உன்னோட ஆட்கள் சாகணும்! இல்ல என்னோட ஆட்கள் சாகணும்! அப்பாவிப் பொது மக்கள் இல்லை ஹெ..ஹெ..ஹெ!”என்ற அந்த வசனமே மேஜிக்காகி, மனதில் நிற்கிறது.
எந்தச் சந்தர்ப்பத்திலும், சம்பந்தமேயில்லாத எந்த ஒருவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணமே, படத்தின் அச்சாணி! இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அதைப் படம் முழுவதும் மெயிண்டைன் செய்ததாலேயே படம் இமயம் ஏறியது!
நூறு பேர் எதிர்த்து வந்தாலும்,கதாநாயகன் ஒருவனே தனித்து நின்று அடித்து வெல்வதாக, ரசிகர்கள் காதுகளில் பூ சுற்றி வந்ததற்கு மாறாக, எப்பொழுதும் நான்கைந்து உதவியாளர்களுடன், எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கையில் அவர்களும் இறங்கிச் சண்டை போடுவதாகக் காட்டியது, எதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது. அந்த இயல்பு நிலை, படத்தைச் சற்றே ஆழமாகப் பார்ப்போருக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது!