சென்னை: உலக மன நல தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை யொட்டி, சென்னை பல்கலைக்கழக உளவியல் துறை, எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியின் உளவியல் துறை மற்றும் டாக்டர் கவுதம் நரம்பியல் மையம் சார்பில் நுங்கம்பாக்கம் எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:
மருத்துவர் கவுதம் உடுப்பி: உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறோம். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால் பலரும் அதை சரியாக கவனிப்பதில்லை. போகப் போக சரியாகிவிடும் என் கின்றனர். இது சரியல்ல. மனநலப் பிரச்சினை என்பது மூளையுடன் தொடர்புடையது. எனவே, உடல் பிரச்சினைக்கு மருத்துவ ஆலோசனை பெறுவதைப் போலவே, மூளையில் பிரச்சினை ஏற்பட்டாலும், தாமதம் செய்யாமல் உடனடியாக அதற்கான மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
நடிகர் மோகன்ராம்: நடிகர்கள் அதிக அளவில் மனநலம் சார்ந்த பிரச்சினைக்கு ஆளாகின்றனர். எனக்கு தெரிந்து நடிகர்கள் பலரும் தேவையற்ற கவலை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வெளிநாட்டு திரைப்படங்களில் மனநலப் பிரச்சினைகளை நல்ல கதையம்சத்தோடு வழங்குகின்றனர்.
மனநலப் பிரச்சினை தொடர்பாக திரைப்படம் எடுப்பவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இந்த நிகழ்ச்சியில் எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் அர்ச்சனா பிரசாத், உளவியல் துறை தலைவர் காயத்ரி
ஸ்வேதா, சென்னை பல்கலைக்கழக உளவியல் துறை தலைவர் சசிகலா, மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.