மதுரை: ‘‘முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி.தினகரன் பேசி வருகிறார்’’ என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு ஆளும் மக்கள் விரோத திமுக அரசை பற்றி எதுவும் பேசாமல், தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து தினகரன் ஏதேதோ கூறி வருகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை. அவருக்கும் புரியவில்லை. அவர் தொடங்கிய அமமுக கட்சியை பற்றி பேசாமல், விஜயையும், திமுகவையும் தூக்கிப்பிடித்து பேசி வருகிறார்.
அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட 10 ஆண்டு காலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தினகரன். என் முகத்தில் விழிக்கக் கூடாது என்று கூட ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனால் தமிழகத்திற்கு வராமல் புதுச்சேரியில் தன்னுடைய தோட்டத்து பங்களாவில் தங்கி பதுங்கி இருந்தவர் தினகரன். ஜெயலலிதா ஒருவரை தகுதி நீக்கம் செய்கிறார் என்றால், அது ஆண்டவனே செய்ததற்கு அர்த்தம்.
தற்போது வலிமையோடு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் அதிமுக மீதும், பொதுச்செயலாளர் பழனிசாமி மீதும் தினமும் அவதூறு பரப்புவதையே வேலையாக கொண்டிருக்கிறார் தினகரன். ஜெயலலிதா மறைவுக்கு பின் தொண்டர்கள் உழைப்பு என்ன ஆகும்? தொண்டர்களெல்லாம் அகதிகளாகவும், ஆதரவு அற்றவர்களாகவும் இருந்த பொழுது இரண்டு கோடி தொண்டர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கச் செய்தவர் பழனிசாமி.
அதிமுக தற்போது 75 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகிறது. ஆனால், ஒரு எம்எல்ஏ கூட இல்லாத டிடிவி.தினகரன் அதிமுகவை பற்றி பழித்து பேசி வருகிறார். மனோஜ் பாண்டியன் சட்ட ஞானம் கொண்டவர். அவர் திமுகவுக்கு சென்றதற்கு கூட பழனிசாமிதான் காரணம் என வாய் கூசாமல் தினகரன் பொய் பேசுகிறார்.
தினகரனுடன் இருந்த செந்தில் பாலாஜி, பழனியப்பன், மாரியப்பன், கென்னடி, தங்க தமிழ்ச்செல்வன், உமாதேவன், உசிலம்பட்டி மகேந்திரன் உள்ளிட்ட நபர்கள் எல்லாம் ஏன் அவரை விட்டு விலகி வெளியே வந்தார்கள்? இதற்காக நேரம் ஒதுக்கி சிந்தித்தாரா? செந்தில் பாலாஜியை ஏன் திமுகவுக்கு அனுப்பி வைத்தீர்கள்?
உங்களை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள். உங்களை நம்பி வந்த வெற்றிவேல், மேலூர் சாமி உங்களுக்காக பல தியாகம் செய்தவர்கள். அவர்களைப் பற்றி நீங்கள் சிந்தித்தீர்களா?
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு ஆட்சியையும், கட்சியையும் கெள்ளையடிக்க திட்டம் போட்டீர்கள். பழனிசாமியிடம் உங்கள் பருப்பு வேகவில்லை. அது நிகழாமல் போனதால் அந்த விரக்தி காரணமாக வாய்க்கு வந்ததை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசிக் கொண்டிருக்கிறார். கே.பழனிசாமி மீது ஏன் கொடநாடு சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று டிடிவி.தினகரன் கூறுகிறார்.
இது குறித்து சட்டமன்றத்தில் நீண்ட விவாதம் நடைபெற்றுள்ளது. அதற்கான சட்டமன்ற பதிவு உள்ளது. நீங்கள் சட்டமன்றம் செல்லவில்லையென்றால், பார்த்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். போயஸ் கார்டனில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பற்றி கடிதம் இருந்தது அதை நான் கிழித்து விட்டேன் என்று டிடிவி தினகரன் கூறுகிறார்.
இப்படி ஒரு கீழ்த்தரமான சிறுமையான அரசியல் செய்து, வெறும் வாயில் அவலை மெள்ளுகுகிறார். பொதுவெளியில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? வாய்க்கு வந்ததை கொச்சைப்படுத்தி அவதூறாக பேசுகிறார். இவருக்கு என்ன தான் பிரச்சினை என்று தெரியவில்லை?. அமமுகவை துவங்கும் போது எவ்வளவு பேர் உங்களுக்கு தோள் கொடுத்து நின்றார்கள். அவர்களில் எவ்வளவு பேரை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினீர்கள்? தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்து விட்டனர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? நீங்கள் மக்கள் பிரச்சினைகள் சார்ந்து எதுவும் செய்ததே இல்லை.
அதிமுகவை பற்றி பேசி கொண்டிருப்பதையே முழுநேர வேலையாக டிடிவி தினகரன் வைத்துள்ளார். உங்க கொசுக்கடி தாங்க முடியவில்லை. ‘நானும் ரவுடி’ தான் என்பது போல தினகரன் பரிதாபகரமான நிலைக்கு சென்று விட்டார். முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? ஆண்டவனுக்கே வெளிச்சம். அந்த பாவமெல்லாம் சும்மா விடாது.
ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? என ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. அதிமுக மூன்றாம் இடத்திற்கு வந்து விடும் என்று கூறுவது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போல உள்ளது. உங்கள் பேச்சு, நடவடிக்கை எல்லாம் 23-ம் புலிகேசி போல் உள்ளது. நீங்கள் தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசினால், நாங்களும் பதில் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
விஜய்யும் தன் தொண்டர்களை உற்சாக படுத்துவதற்காக திமுக – தவெக இடையே தான் போட்டி என்கிறார். எல்லா கட்சிகளும் இப்படிதான் பேசியாக வேண்டும். பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும்’’ என்றார்.