கோவை: ஜெயகாந்தன் தோழர்கள் அமைப்பின் சார்பில், அமெரிக்க வாழ் தமிழரும், எழுத்தாளருமான பி.கே.சிவகுமாருடன் கலந்துரையாடல் கூட்டம், கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள, அறிவொளி சங்கர் அரங்கத்தில் நேற்று (ஆக.3) நடந்தது.
ஜெயகாந்தன் தோழர்கள் அமைப்பினைச் சேர்ந்த அப்துல்லா வரவேற்றுப் பேசினார். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார். இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் நெருங்கிய தொடர்புடைய மோத்தி ஆர்.ராஜகோபால் குறித்த கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுத்தாளர் பி.கே.சிவகுமாரின், ‘உள்ளுருகும் பனிச்சாலை’ என்ற கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து எழுத்தாளர் பி.கே.சிவகுமார் பேசும்போது, ‘‘கோபாலகிருஷ்ணனின் தீர்த்தயாத்திரை நாவலில் நிறைய விஷயங்கள் உள்ளன. தந்தை பெரியாரின் தாக்கம் நிறைந்த தமிழ்நாட்டில், மதம் சார்ந்த பிரச்சாரம் எடுபடாத தமிழ்நாட்டில், காவிச்சட்டை அணிந்து செல்லும் நபர்கள் மீது மிகுந்த மரியாதை மக்களுக்கு உள்ளது.
அது ஆன்மிகம் சார்ந்த மரியாதையாக உள்ளது. இந்த நாவலில் பல இடங்களில் நினைக்கும் விஷயங்களை உடனடியாக செய்ய முடியாததை பற்றி குறிப்பிட்டிருப்பார். மனித மனம் என்பது ஒரு முடிவை விரைவாக எடுத்தாலும், அதை செயல்படுத்துவதற்கு ஆட்களுக்கு, சூழலுக்கு ஏற்ற மாதிரி சற்று நேரம் எடுக்கிறது. பால தண்டாயுதம் போன்ற பெரிய ஆளுமைகள் குறித்து பலருக்கு தெரியவில்லை. அவர்களைப் பற்றிய ஆவணப்படமோ, முழு வரலாற்று நூலோ கொண்டு வர வேண்டும். அதற்கு கலை இலக்கிய பெருமன்றம் முழு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவில் லட்சியவாத்தின் ஊற்றுமுகங்கள் என இரண்டு கட்சிகள் உள்ளன. ஒன்று காங்கிரஸ் கட்சி. அதில் பல தலைவர்கள் உள்ளனர்.
இரண்டாவது இடதுசாரிகள். கம்யூனிஸ்ட்கள் செய்த தியாகங்கள் புதிய தலைமுறைக்கும், வரும் தலைமுறைக்கும் தெரியாமலே போய் விடுகிறது’’என்றார். தொடர்ந்து கவிஞர் க.வை.பழனிசாமி, தொழிலதிபர் மோத்தி ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோரும் பேசினர். நிகழ்ச்சியின் நிறைவில், பத்திரிகையாளரும், ஜெயகாந்தன் அமைப்பினைச் சேர்ந்தவருமான நடராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.