“மனுசனோட எல்லா அழுக்கையும் பேசுறது தான் இந்தக் கதை" – பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி

Spread the love

இளம் இயக்குநர் அபிலாஷ் இயக்கத்தில், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் வெளியீட்டில் ‘பேச்சி’ என்ற குறும்படம் யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யா “மனதை நெகிழ வைக்கும் ஓர் அற்புதமான நடிப்பு” என இப்படத்தின் நாயகன் ராஜமுத்துவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பாராட்டியிருக்கிறார்.

சூர்யாவின் பதிவு
சூர்யாவின் பதிவு

போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான ராஜமுத்து பண்ணையடிமையாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு தன் தாயின் இறப்பு செய்தி வர, தன் சொந்த ஊர் நோக்கி நாயகன் பயணிக்கும் கதை தான் இந்தப் பேச்சி. சாதிய, வர்க்க பேதங்களை எளிய மனிதர்களின் பூச்சுகளற்ற வாழ்வியலோடு காட்டியிருக்கிறார் இயக்குநர். இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் இவரின் நடிப்பை “மனதை நெகிழ வைக்கும் ஓர் அற்புதமான நடிப்பு” என மனதாரப் பாராட்டியிருக்கிறார். பல தரப்பினரிடம் பாராட்டை பெற்று வரும் நிலையில் அக்குறும்படத்தின் இயக்குநர் அபிலாஷ் செல்வமணிக்கு வாழ்த்துகளைச் சொல்லி படம் குறித்து உரையாடினோம். தேரிக் காட்டின் வெக்கையோடு கதையையும் சுமந்த கதையை பேசத் தொடங்கினார்.

இயக்குநர் அபிலாஷ் செல்வமணி

“எனக்கு சொந்த ஊரு திருவாரூர். ஒரு மனுசனோட எல்லா பரிமாணங்களிலும் இருக்கக்கூடிய அழுக்கைப் பேசுறது தான் இந்தக்கதை. அதை நோக்கி தான் இந்தப்படம் நகருது. நிலத்தோட தன்மைக்கு ஏற்றப்படி கதைத்தன்மையை மாத்திக்கிட்டோம். சினிமாவுக்குள்ள நேரடியா வரமுடியாத பொருளாதாரச் சூழல்களால டிப்ளோமோ மெக்கனிக்கல் படிச்சிட்டு ஒரு தனியார் நிறுவனத்துல 5 வருசம் வேலை பார்த்தேன். அதுக்கு இடைப்பட்ட காலத்துல எழுதுனது தான் இந்தக்கதை. இதை அந்த நேரத்துலயே எடுத்துருந்தா இவ்வளவு காத்திரமா வந்திருக்குமான்னு தெரியல. `அலங்கு’ படத்துல உதவி இயக்குநராக இருந்தேன். மறுபடியும் 2020ல இருந்து 5 வருசமா இந்தக்கதை பல்வேறு தன்மையில மாற்றமடைந்து இந்தக்கதைக்களத்தோட உருவாகியிருக்கு.

Vijay Sethupathi
Vijay Sethupathi

தேரிக்காடுன்ற நிலம் தான் இந்தக் கதைக்களத்தை உருவாக்குச்சுன்னு சொல்லலாம். நிறைய பிலிம் பெஸ்டிவலுக்கு அனுப்புனோம். நிறைய அவார்டு இந்தப்படம் வாங்குச்சு. விஜய் சேதுபதி சார் படம் பார்த்துட்டு தான் நானே ரிலீஸ் பண்றேன்னு சொல்லி ரிலீஸ் பண்ணாரு.

நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்ததுக்கு விஜய் சேதுபதி சார்தான் காரணம். ஒரிஜினலான தன்மையைக் கொண்டு வர்றதுக்காக சித்திரை உச்சிவெயில்ல தான் ஷுட் பண்ணினோம். எங்களைவிட `மாரி’ கேரக்டர்ல நடிச்ச ராஜமுத்துக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். அதைப் பொருட்படுத்தாம அவர் பண்ணிக்கொடுத்தாரு. அவர் என்னைய நம்பிப் பண்ணாரு. அவருக்கும் நடிக்கிறதுல ஆர்வம் இருந்ததுனால வேலை வாங்கிட முடியும்ன்னு நம்பிப் பண்ணோம்.” என தன் மாரி-யின் மீதான நம்பிக்கையைச் சொல்லி அபிலாஷ் நெகிழ, அவரின் கைகளைப் பற்றியபடியே ராஜமுத்து பேசத் தொடங்கினார்.

ராஜமுத்து
ராஜமுத்து

” நான் சின்ன வயசுலயே போலியோவால பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போ ஜிம்னாஸ்டிக் பண்ற ஒரு நடனக்கலைஞர். இயக்குநர் எங்களைத்தேடி வந்து எனக்காக வெயிட் பண்ணி நீங்க நடிங்க பாத்துக்கலாம்ன்னு சொல்லி தான் நடிக்க வச்சாரு. வலியை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு அவங்க என்ன கேட்டாலும் செஞ்சுகொடுத்துறணும் என்கிற உறுதியோடதான் செஞ்சேன். அவங்கதான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தாங்க. நம்மள நம்பி இப்படியான வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. அதைச் சரியா பயன்படுத்தினேன் நல்லா வந்திருக்கு” என்கிற ராஜமுத்துவின் கண்களில் அத்தனை நிறைவு.

படப்பிடிப்பின் போது
படப்பிடிப்பின் போது

ராஜமுத்து சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அபிலாஷிடம் நத்தையைக் குறியீடாகப் பயன்படுத்திய நோக்கம் குறித்துக் கேட்டோம்.

” நத்தையை ரெண்டு விதமா பார்க்கலாம். நத்தை சருமம் ரொம்ப மென்மையா இருக்கும். அது பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழக்கூடியது. அப்படி நீர்நிலையில வாழக்கூடிய உயிர், பாலைவனத்துல விழுந்தா என்னவாகும் என்பதை `மாரி’ கதாபாத்திரத்தோட நிலையைக் காட்டுறதுக்காக வச்சுருந்தோம். அதுமட்டுமில்லாம சுடும் பாலைநிலத்தைத் தாண்டி நிச்சயம் நீரோடை வரும்ன்னு சொல்றதுக்காகவும் அதை வச்சுருந்தோம். அடக்குமுறை பண்ணிக்கிட்டு இருக்கிற மனிதர்கள், அவங்க செய்றது தப்புன்னு உணர்றது தான் இந்தப் படத்துக்கான வெற்றி. இந்தக் குறும்படத்தை வச்சு படவாய்ப்புகள் கிடைக்கும்ன்னு நம்புறேன். இதில் பேசப்படுற விஷயங்களை எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைச்சுதான் எடுத்தேன் ஆனா நம்ம செய்றதைச் சரியா செஞ்சா சரியான இடத்தைப் போய் சேரும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. என்னோட வேலைசெஞ்சவங்களோட ஒத்துழைப்பினால் தான் இப்படியான உழைப்பைக் கொடுக்க முடிஞ்சிருக்கு” என மனம் நிறைகிறார் இயக்குநர் அபிலாஷ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *