கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் சி.பி.எம். மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யுடன் தொடர்பில் இருந்தார்.
பின்னர் செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஊடகவியலாளரான அவருக்கு 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆரன்முளா சட்டசபை தொகுதியில் போட்டியிட சி.பி.எம் கட்சி திடீரென வாய்ப்பு கொடுத்தது.
ஊடகவியலாளருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிகழ்வு அப்போது பேசுபொருளானது. 2016 சட்டசபை தேர்தலில் ஆரன்முளா தொகுதியில் வெற்றிபெற்றார். அந்தச் சமயத்தில் வீணா ஜார்ஜின் கணவர் ஜார்ஜ் ஜோசப் ஆர்த்தடாக்ஸ் சபையின் செயலாளராக இருந்தார்.
சபை வாக்குகள் பெரிய அளவில் கிடைத்ததுதான் வீணா ஜார்ஜின் வெற்றிக்குக் காரணம் எனப் பேசப்பட்டது. எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் வீணா ஜார்ஜ். ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றதால் 2021 சட்டசபை தேர்தலில் ஆரன்முளா தொகுதியில் மீண்டும் போட்டியிட சி.பி.எம் வாய்ப்பு வழங்கியது.
இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்ற வீணா ஜார்ஜ் இரண்டாம் பினராயி சர்க்காரில் சுகாதார அமைச்சராக ஆனார்.

கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜா-வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் பதவியில் இருக்கும் வீணா ஜார்ஜ் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வீணா ஜார்ஜிக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்க வேண்டாம் என அவரது கணவர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் சி.பி.எம் மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.