“மன்னார் அண்ட் கம்பெனியை முதலில் ஓபிஎஸ் கலைக்க வேண்டும்!” – போட்டுத் தாக்கும் பெங்களூரு புகழேந்தி நேர்காணல் | Bengaluru Pugazhendhi interview

1371722
Spread the love

பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் பாஜக தரப்பில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்த சூட்டோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், அதிமுக உள் விவகாரங்களை நன்கு அறிந்த பெங்களூரு புகழேந்தியிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

அதிமுக ஒருங்கிணைப்புக் குழு இன்னமும் செயல்படுகிறதா?

அதிமுக-வை ஒருங்கிணைக்க நாங்கள் சில முயற்சிகளை எடுத்தோம். ஆனால், அதிமுக-வில் முக்கிய பொறுப்புகளில் இருந்த எங்களை, “தெருவில் செல்வோருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என, இபிஎஸ் அவமானப்படுத்தினார். தன்னை உலக மகா தலைவராக நினைக்கும் இபிஎஸ், அதிமுக ஒன்றுபடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

“நிபந்தனை இன்றி, அதிமுக-வில் இணையத் தயார்” என்று ஓபிஎஸ் தெரிவித்தும், இபிஎஸ் பிடிவாதமாக இருக்கக் காரணம், ஓபிஎஸ் கட்சியைக் கைப்பற்றிவிடுவார் என்ற பயமா?

கட்சியை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு, இப்படித் தான் செயல்படத் தோன்றும். அண்ணா, பெரியார் வழியை பின்பற்றும் அதிமுக நிர்வாகிகள், இந்து முன்னணி மாநாட்டிலும், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்கின்றனர். அதிமுக முகமூடி அணிந்த பாஜக-காரராகவே இபிஎஸ் செயல்படுகிறார். அவருக்கு அதிமுக-வை பற்றி கவலையில்லை.

அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதியான போதே என்டிஏ-யில் ஓபிஎஸ்ஸுக்கு இடமில்லை என்று முடிவாகிவிட்டதோ?

இபிஎஸ் அப்படி ஒரு நிபந்தனையைச் சொல்லி இருக்கலாம். அதை ஏற்றுக்கொண்ட பாஜக-வினர், ஓபிஎஸ்ஸுக்கு இதைச் சொல்லாமல் நாடகம் ஆடி இருப்பார்கள்.

கடந்த 8 ஆண்டுகளாக தங்களுக்கு விசுவாசமாக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு கடந்த காலங்களில் உரிய மரியாதை அளித்ததா பாஜக?

பாஜக-வினர் ஓபிஎஸ்ஸுக்கு எப்போதும் மரியாதை கொடுத்தது இல்லை. அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்தி இருக்கின்றனர். அத்தனை அவமதிப்புகளையும் அவமானங்களையும் அவர் பொறுமையாக ஏற்றுக்கொண்டு இருந்தார். இப்போதுதான், “நான் அம்மாவோடு 25 ஆண்டு காலம் அரசியல் பயணம் செய்தவன். தன்மானம் உள்ளவன்” என்று சொல்லி இருக்கிறார்.

என்டிஏ-யை விட்டு ஓபிஎஸ் வெளியேறியதால் பெரிதாக என்ன பாதிப்பு வந்து விடும்?

ஏற்கெனவே அண்ணாமலையை மாற்றியதால், பாஜக-வின் வாக்கு வாங்கி இரண்டு சதவீதமாக சரிந்துவிட்டது. அந்த அணியின் முகமாக இருந்த ஓபிஎஸ் வெளியேறியதால், அதுவும் இப்போது ஒரு சதவீதமாக சுருங்கிவிட்டது. மொத்தத்தில் தமிழகத்தில் பாஜக ஐசியு-வுக்குப் போய்விட்டது.

“ஓபிஎஸ் என்னைக் கேட்டிருந்தால் பிரதமரைச் சந்திக்க நேரம் வாங்கித் தந்திருப்பேன்” என்று நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கிறாரே..?”

அதிமுக-வில் இருந்த போது, ஓபிஎஸ் முன்பு கைகட்டி நின்றவர் நயினார் நாகேந்திரன். இப்போது தன் பங்கிற்கு கிண்டல் செய்து, அவரை அவமானப்படுத்துகிறார். பிரதமர் வருவதற்கு இரண்டு தினங்கள் முன்பாகவே அவரை சந்திக்க அனுமதி கேட்டு, ஓபிஎஸ் கடிதம் அனுப்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதைத் தெரிந்த நாகேந்திரன், ஓபிஎஸ்ஸிடம் தொடர்பு கொண்டு பேசி, சந்திப்புக்கு நேரம் பெற்றுக் கொடுத்திருக்கலாம். பிரதமருடன் தனி விமானத்தில் வந்ததை பெருமையாகச் சொல்லும் நாகேந்திரன், அப்போதாவது அவரிடம் நேரில் சொல்லி அனுமதி பெற்றுத் தந்திருக்கலாமே.

மீண்டும் கூட்டணியை விட்டு விலகி, பாஜக-வுக்கு இபிஎஸ் துரோகம் செய்ய வாய்ப்புள்ளதாகச் சொல்லி இருக்கிறீர்களே..?

நேற்று, வேண்டாம் என்றார். இன்று, வேண்டும் என்கிறார். நாளை, வேண்டாம் எனச் சொல்லமாட்டார் என யார் உத்தரவாதம் கொடுக்க முடியும்?

ஒரே நாளில் இரண்டு முறை முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்ததை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியுமா?

முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டால், அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே இருக்கிறது. காலையில் நடைப்பயிற்சியின் போது முதல்வரைச் சந்தித்த போது இதுபற்றி ஓபிஎஸ் கூறியிருக்கலாம். இதனால், மாலையில் அவரைச் சந்திக்க, முதல்வர் ஸ்டாலின் நேரம் ஒதுக்கி இருக்கலாம். ஆனால், முதல்வருக்கு இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு முதல்வரை சந்தித்திருப்பதன் மூலம் இனி, ஓபிஎஸ்ஸின் அரசியல் பயணம் திமுக உடன் இணைந்து தொடருமோ?

விலகல் அறிவிப்பு வெளியான அதே நாளில், முதல்வரைச் சந்திப்பதை ஓபிஎஸ் தவிர்த்திருக்க வேண்டும். இதனால், திமுக-வுடன் கள்ளத்தொடர்பு என்று இபிஎஸ் செல்வதற்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார். அதேசமயம், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக பயணித்தவர், மூன்று முறை முதல்வராக இருந்தவர், பத்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஓபிஎஸ், அதிமுக பேனரை விட்டு விட்டு, திமுக-வில் இணைய முடியாது.

ஈரோடு முத்துசாமியிலிருந்து, ராஜகண்ணப்பன் வரை முன்னாள் அதிமுக தலைவர்கள் திமுக-வில் கோலோச்சி வரும்போது ஒபிஎஸ் திமுக-வில் இணைவதில் என்ன தவறு?

திமுக அமைச்சரவையை நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், அதிமுக-விலிருந்து வந்தவர்கள் என்று சொல்வதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இவர்கள் யாரும் தலைவர்கள் அல்ல. ஓபிஎஸ் முதலமைச்சராக, அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராக, உயர்ந்த இடத்தில் இருந்தவர். ஆகவே, மற்றவர்களைப் போல், ஓபிஎஸ் திமுக-வில் சேர்ந்தால், அது அவ்வளவு இணக்கமாக இருக்காது.

ஓபிஎஸ்ஸுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் அந்தந்த தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியை திமுக கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்களே..?

அவர்கள் ஐந்து பேருக்கு மட்டும் சீட் என்றால், எஞ்சி இருக்கும் மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களும் தெருவில் அனாதையாக நிற்பார்களா?

அப்படியானால், ஓபிஎஸ் இப்போது என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

தொண்டர் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் இயங்கும் பதிவு இல்லாத ‘மன்னார் அண்ட் கம்பெனி’யை முதலில் கலைக்க வேண்டும். அதிமுக தலைமை விவகாரத்தில் உரிமையியல் வழக்கில் கிடைக்கும் தீர்ப்பே இறுதியானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையிலேயே செயல்பட வேண்டும்.

தேர்தலின் போது இரட்டை இலைக்கு ஓபிஎஸ் உரிமை கோராத காரணத்தால் தான், அது இபிஎஸ்ஸுக்குச் சென்றது. எனவே, வரும் தேர்தலில், ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில், சின்னத்தைக் கோர வேண்டும். அப்படிச் செய்தால், சிவில் வழக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்.

இதைத்தான் நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறீர்கள். ஆனால், ஓபிஎஸ் சட்டை செய்யவில்லையே?

போன மாட்டை தேட மாட்டார்; வந்த மாட்டைக் கட்ட மாட்டார். இது ஓபிஎஸ்ஸுக்கு உள்ள பழக்கம். கிமு, கிபி என்று காலத்தை குறிப்பிடுவது போல், அவமானத்திற்கு முன்னால், அவமானத்திற்கு பின்னால் என்று பிரித்துப் பார்த்து இனி ஓபிஎஸ் செயல்பட வேண்டும். தன்னை நம்பி வந்தவர்களுக்கு, கிள்ளித் தராமல் பெரிய மனதோடு அள்ளித் தர வேண்டும். அதிமுக பெயரிலேயே அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்று தர வேண்டும்.

தவெக உடன் கூட்டணி அமைப்பது ஓபிஎஸ்ஸுக்கு நல்ல சாய்ஸ் ஆக இருக்காதா?

திமுக-வில் இணைந்தாலோ, அல்லது கூட்டணி வைத்தாலோ ஓபிஎஸ் மீது சில கேள்விகள் எழும். ஆனால், தவெக உடன் கூட்டணி என்றால், யாரும் குறை சொல்ல முடியாது. வரும் தேர்தலில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையேதான் பெரும் போட்டி இருக்கப் போகிறது.

அதிமுக தலைமை தொடர்பான வழக்குகளில் உங்கள் தரப்புக்கு சாதகமாக தீர்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இபிஎஸ் எடுக்கும் எந்த முடிவுகளும் நிலையானது அல்ல என்பது உறுதியாகி உள்ளது. நான் இப்போதும் உச்சநீதிமன்றத்தை நம்புகிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலையை ஒரு சார்புக்கு மட்டும் கொடுத்தால், அது தவறு என்று, ஒரே நாளில் உச்சநீதிமன்றம் சென்று என்னால் உத்தரவு வாங்கி வர முடியும்.

கடந்த 1998-ல் பாஜக உடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டது வரலாற்றுப் பிழை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியிருப்பது குறித்து..?

ஒருமுறை, உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் நடந்த அதிமுக செயற்குழுவில் பேசிய அம்மா, கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் காலை வாரிக்கொள்வது குறித்து வருத்தப்பட்டதுடன், “இப்படி இருந்தால், நான் அரசியலில் இருக்க மாட்டேன்” என்றார். அதற்கு, “நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. இப்படிச் சொல்லாதீர்கள் அம்மா” என்று நான் சொன்னேன்.

“நீங்கள் வெளி மாநிலத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாது. என்னைச் சுற்றி திருடர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்” என்று அம்மா வெளிப்படையாக அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். அம்மா குறிப்பிட்ட இத்தகைய துரோகிகள் தான், தற்போது பாஜக-வை போற்றி பஜனை பாட, அம்மாவின் முடிவையே விமர்சிக்கின்றனர். இவர்களைப் போன்ற துரோகிகளை தூக்கி எறியாததுதான், அம்மா செய்த வரலாற்றுப் பிழை.

ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்த கடம்பூர் ராஜூ மீது இபிஎஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையே?

தைரியம் இருந்தால், இபிஎஸ் நடவடிக்கை எடுக்கட்டும். இது மட்டுமல்ல, மக்களவைத் தேர்தலில், ஏழு தொகுதியில் டெபாசிட் பறிபோய், தோல்வியடையக் காரணமான மாவட்டச் செயலாளர்கள் மீது கூட அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என இபிஎஸ் மேற்கொண்டுள்ள பிரச்சாரப் பயணத்தில் பெரும் கூட்டம் கூடுகிறதே?

ஜப்பானில் சுனாமி வந்துள்ளது. அங்கு போய், மக்களை பாதுகாக்கச் சொல்லுங்கள். தமிழக மக்கள் பிரச்சினையின்றி நன்றாக இருக்கிறார்கள். இந்தப் பயணத்தின்போது, சேலை, பணம் கொடுத்து கூட்டம் சேர்த்ததை, ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டனவே. இபிஎஸ் பேச்சைக் கேட்க, பணம் கொடுக்காமல் 10 பேர் வந்தாலே அதிசயம் தான்.

அப்படி என்றால், திமுக-வின் பின்னால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திரண்டு விடும் என்கிறீர்களா?

நான் அப்படிச் சொல்லவில்லை. இண்டியா கூட்டணி ஓரணியில் வலுவாக உள்ளது. அதை வலுப்படுத்தவே அவர்கள் ஓரணி என்று சொல்கிறார்கள். இபிஎஸ்ஸிடம் அணியும் இல்லை… பிடுங்குவதற்கு ஆணியும் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *