மேற்கு வங்க மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தினால் அது அண்மை மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருந்த நிலையில், மணிப்பூர் மற்றும் அசாம் முதல்வர்கள் அதற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
மமதா பானர்ஜி, மாநிலங்களில் வன்முறையை தூண்டும் விதத்திலும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதற்காக, பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இரு மாநில முதல்வர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் மாணவா் அணி தொடக்க தின பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மமதா பானர்ஜி பேசினார்.
அப்போது, மேற்கு வங்கத்துக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று பாஜக முயற்சித்தால், அது அண்டை மாநிலங்களுக்கும் பரவும் என்பதை வலியுறுத்தும் வகையில், நீங்கள் மேற்கு வங்கத்தைக் கொளுத்தினால், அது அசாம், வடகிழக்கு, உத்தரப்பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் தில்லிக்கும் பரவி பற்றி எரியும் என்று எச்சரிக்கும் வகையில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்த்வா விஸ்வா சர்மா, சொந்த மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை மூடி மறைக்க, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.