மயக்கவியல் நிபுணர்களின் நல்வாழ்வை மேம்படுத்த வேண்டும்: துணைவேந்தர் கே.நாராயணசாமி அறிவுறுத்தல் | About Wellbeing of anesthesiologists

1328529.jpg
Spread the love

சென்னை: மன அழுத்தம், நீண்ட பணி, உடல் சோர்வால் சவால்களை எதிர்கொள்ளும் மயக்க மருந்து நிபுணர்களின் நல்வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 16-ம் தேதி (நேற்று) உலக மயக்கவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக மயக்கவியல் தினத்தை முன்னிட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மயக்கவியல் துறை மற்றும் இந்திய மயக்கவியல் நிபுணர் சங்கத்தின் சென்னை மாநகர கிளை இணைந்து தொடர் மருத்துவக் கல்வி பயிலரங்கத்தை மருத்துவமனையில் நடத்தியது.

நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்கவியல் துறையின் செய்தி மடலை வெளியிட்டார். மருத்துவமனை டீன் பாலாஜி, மருத்துவக் கண்காணிப்பாளர் மகேஷ், துணை முதல்வர் ஜேனட் சுகந்தா, நிலைய மருத்துவ அதிகாரி வனிதா மலர் மற்றும் மயக்கவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.

மயக்கவியல் துறையின் பேராசிரியர் ஆர். மாலா, ஏற்பாடு செய்திருந்த அல்ட்ராசவுண்ட் பயிற்சியில் முதுகலை மருத்துவ மாணவர்கள் 300 பேர் பயன் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் மாநிலம் முழுவதும் 18 மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து வந்திருந்த 80 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

துணைவேந்தர் கே.நாராயணசாமி பேசியதாவது: 1846-ம் ஆண்டு அறுவை சிகிச்சையில் ஈதர் மயக்க மருந்தை முதன்முதலில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 16-ம் தேதி உலக மயக்கவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தநாள் மயக்கவியல் துறையின் முன்னேற்றத்தை கொண்டாடுகிறது. நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் மயக்க மருந்து வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கிறது. மருத்துவத் துறையில் மயக்கவியல் துறையின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் இத்துறையின் தொடர் முன்னேற்றம் மற்றும் புதுமைகளை எடுத்துரைப்பதும் இதன் நோக்கமாகும்.

2024-ம் ஆண்டு உலக மயக்கவியல் தினத்தின் கருப்பொருள் “மயக்கவியல் துறை வல்லுநர்களின் நலம் பேணல்” என்பதாகும். மயக்கவியல் வல்லுநரின் பணி மிகுந்த கவனம் மற்றும் துரித செயலாற்றல் தேவைப்படும் பணியாகும். அறுவை சிகிச்சைக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, நோயாளியின் வலி மற்றும் மயக்க நிலையை கட்டுப்படுத்துவது இன்றியமையாதது. அதனால் ஏற்படும் மன அழுத்தம், நீண்ட நேரம் பணியிலிருத்தல், உடல் சோர்வு ஆகியவற்றால் மயக்க மருந்து நிபுணர்கள் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

ஆரோக்கியமான வேலை, வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துதல், ஆதரவான பணிச்சூழலை உருவாக்குதல், நீண்ட நேர பணியின் போது பணியிடை ஓய்வெடுத்தல், சாதனைகளை அங்கீகரித்தல், ஆக்கபூர்வமான கருத்துகளை வழங்குதல் ஆகியவை மருத்துவரின் நல்வாழ்வை கணிசமாக மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.உலக மயக்கவியல் தினத்தையொட்டி அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த தொடர் மருத்துவக் கல்வி பயிலரங்கத்தில் மருத்துவமனை மயக்கவியல் துறையின் செய்தி மடலை வெளியிடுகிறார் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி. மருத்துவமனை டீன் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் உடன் உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *