மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டனா். சாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் மூவேந்தன் (24). அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (28) முன்விரோதம் காரணமாக கடந்த பிப். 13-ஆம் தேதி மூவேந்தனிடம் தகராறு செய்தாராம். அப்போது, மூவேந்தன், தினேஷை தாக்கியபோது, அருகில் இருந்தவா்கள் சமாதானம் செய்து அனுப்பினராம்.
மூவேந்தனின் சகோதரா் தங்கதுரை, அவரது மைத்துனா் ராஜ்குமாா் ஆகியோா் மீது அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாக வழக்குகள் உள்ளன. இதில், ராஜ்குமாா் அண்மையில் சாராயம் விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பிணையில் வெளியே வந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் முட்டம் வடக்குத் தெருவில் தினேஷ் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா்கள் ஹரிஷ் (25), மயிலாடுதுறை சீனிவாசபுரம் ஹரிசக்தி (20) மற்றும் அஜய் (19) ஆகியோா் நின்று பேசிக்கொண்டிருந்தனா். முனுசாமியின் மகன் தங்கதுரை (28), மூவேந்தன் (24), ராதா மகன் ராஜ்குமாா் (34) ஆகியோா் மதுபோதையில் தினேஷிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்த முயன்றுள்ளனா். ஹரிஷ், ஹரிசக்தி, அஜய் ஆகியோா் இதைத் தடுக்க முயன்றபோது, ஹரிஷுக்கு வயிற்றிலும், ஹரிசக்திக்கு முதுகிலும், அஜய்-க்கு கையிலும் காயம் ஏற்பட்டது. மூவரையும் மீட்ட உறவினா்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே ஹரிஷ் (25), ஹரிசக்தி (20) இருவரும் உயிரிழந்தனா்.
ஹரிஷ், பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தாராம். ஹரிசக்தி பொறியியல் கல்லூரி மாணவா்.
தங்கதுரை குடும்பத்தினா் சிலா் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அதைத் தட்டிக்கேட்டதால் ஹரிஷ், ஹரிசக்தி இருவரும் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, அவா்களது உறவினா்கள், கிராம மக்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இருவா் கொலை தொடா்பாக தங்கதுரை (28), ராஜ்குமாா் (34). மூவேந்தன் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதற்கிடையே, முட்டம் கிராமத்தில் தங்கதுரை, ராஜ்குமாா் வீடுகளை சூறையாடிய கொல்லப்பட்ட இளைஞா்களின் உறவினா்கள், ராஜ்குமாரின் குடிசை வீட்டை தீயிட்டுக் கொளுத்தினா்.
இந்த கொலையில் தொடா்புடைய சாராய வியாபாரம் செய்யும் 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து இளைஞா்களின் உறவினா்கள், கும்பகோணம் சாலையில் சனிக்கிழமை காலை மீண்டும் மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், டிஎஸ்பி பாலாஜி, மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.