மயிலாடுதுறை: `எப்போ இடிஞ்சு விழும்னு தெரியலை' – அச்சுறுத்தும் பாலம்… மக்களின் திக்… திக் பயணம்!

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவாஞ்சேரி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவ்வூரையும் இலுப்பூரையும் இணைப்பதற்கு 90-களில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே நடைப்பாலம் கட்டப்பட்டது.

ஆனால், இப்பாலமானது கட்டி 50 ஆண்டுகளைக் கடந்த நிலையில், பாலத்தில் சாந்துகள் பெயர்ந்து, மிகுந்த விரிசல்களுடன், இடையில் உள்ள இணைப்புக் கம்பிகள் உடைந்து நீட்டியவாறு… எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தக்கூடிய மோசமான நிலையில் இருக்கிறது.

இதனால், மக்கள் இந்தப் பாலத்தை மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்லும் சூழல் நிலவுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “இந்தப் பாலம் கட்டி 30 வருஷமாச்சு. கடந்த பத்து வருஷமா எப்ப வேணாலும் இடிஞ்சு விழும் நிலைமையில தான் இந்தப் பாலம் இருக்கு. நாங்களும் எத்தனையோ முறை மனு கொடுத்திட்டோம். பல பல போராட்டமும் நடத்திட்டோம்.

ஆனா, இங்க பத்து வருஷமா நாங்க பண்ண எதுக்குமே பலன் இல்லாம போச்சு. போராட்டம் பண்ணுகிற போதெல்லாம் அரசு அதிகாரிங்க வருவாங்க. `அது செஞ்சு தர்றோம், இது செஞ்சு தர்றோம்’னு கண்துடைப்பு காரணங்களை மட்டும் நல்லா சொல்லுவாங்க. ஆனா, ஒன்னுமே செய்ய மாட்டாங்க. நாங்க கடைசியா நடத்துன போராட்டத்துலகூட இதையே தான் பண்ணுனாங்க. எங்க ஊருல இந்த நடைப்பாலம் மட்டும் இப்படி இல்ல. ரோடும் ரொம்ப மோசமாதான் இருக்கு.

கிராமத்துல இருக்குற தெருக்களுக்குப் போகுற மக்கள் பயன்படுத்துகிற ரோடும், குண்டும் குழியுமா படுமோசமா இருக்கு. இந்த நிலைமையில இருக்குற ரோட்லயும், நடைப்பாலத்துலயும்தான் தினமும் 10 ஸ்கூல் வேன் போயிட்டு வருது. இப்போகூட ஒரு ஸ்கூல் வேன் இந்தப் பாலத்து வழியா போறப்ப, பாலத்துல நீட்டிக்கிட்டு இருந்த கம்பியில மாட்டி, வேன்ல உக்கார்ந்து இருந்த பசங்க வெளியே வரமுடியாம போயிடுச்சு.

திரும்ப அந்தக் கம்பியை வெட்டி எடுத்ததுக்கு அப்பறம்தான் பசங்க வெளியில வந்தாங்க. இதுமட்டுமல்ல, அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கூட வர்றது கிடையாது. பெரிய வண்டிங்க எங்க ஊருக்குள்ள வர்றதே இல்ல… கேட்டா, `உங்க ஊரு பாலம் எப்ப இடிஞ்சு விழுமோ தெரியல. அதனால நாங்க வரமாட்டோம்’ன்னு சொல்லுறாங்க.

ஏழு, எட்டு கிராமத்து மக்களுக்கும் காய்கறி வாங்க, கடைத் தெருவுக்குப் போக இதுதான் ரோடே. எங்க ஊர்தான் குமாரமங்கலம், கலசம்பாடி, திருவிளையாடட்டம், திருவிடைக்கழி, தில்லையாடி, செம்பனார்கோயில், மேலாக்கூர், நெடுவாசல், பட்டவரம்னு 15-க்கும் மேற்பட்ட ஊர்களுக்குப் போகுறதுக்கு, இணைப்பு சாலையா இருக்கு. ஆனா, இந்தப் பாலம் இப்படி இருக்குறதால இதைப் பயன்படுத்தவே பயப்படுறாங்க. அதனால இந்தப் பாலத்தையும், ஊர்ல சாலை வசதியையும் மேம்படுத்திக் கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும்” என்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அழகிரிசாமி கூறுகையில், “பல ஆண்டுகளாகப் பல கட்டப் போராட்டங்களை நடத்திய நிலையிலும் இப்பாலத்தைச் சரிசெய்து, சாலை வசதி செய்துகொடுக்க அரசு மறுக்கிறது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் எந்தப் பயனும் இல்லை. உதவி மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என… அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்ட போதிலும், இன்று வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்களுக்கு மிகுந்த பயன்தரும் வகையில் உள்ள இந்த நடைப்பாலத்தை சற்றே அகலப்படுத்தியும், தரமான முறையில் தெருக்களுக்குத் தார்ச்சாலையும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் அரசு அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அமைத்துத் தர வேண்டும்” என்றார்.

இது குறித்து செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகனிடம் கேட்டதற்கு, “மக்கள் போராட்டம் நடத்தியபோது, மாவட்ட துணை ஆட்சியர் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலுக்குப் பின் ஏதேனும் ஓர் அமைப்பின் கீழ் நிதி ஒதுக்கிக் கட்டித் தரப்படும் எனக் கூறியுள்ளார். அவர் கூறியதுபோல் தேர்தலுக்குப் பின் நடைப்பாலமும், இரண்டு கிலோமீட்டர் தார்ச்சாலையும் அமைத்துத் தரப்படும்” எனக் கூறினார்.

அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கையை மேற்கொண்டு புதிய தார்ச்சாலையும், சற்றே அகலத்துடன் கூடிய புதிய நடைப்பாலமும் அமைத்துத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *